கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி...
மனோஜ் பாரதிராஜா: "மன அழுத்தம் அனைத்தையும் தாங்கிக் கொண்டு..." - திரைப் பிரபலங்கள் இரங்கல்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில், அஞ்சலி செலுத்திய பின் மனோஜ் பாரதிராஜா குறித்துப் பேசிய பார்த்திபன், "மரணம் இயற்கை சம்பந்தப்பட்டது. அனைவருக்கும் வரும். இந்த சிறிய வயதில் மரணம் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதை பாரதிராஜா சாரால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. அதுதான் எனக்குப் பயமாக இருந்தது. நான் எப்படி அவருக்கு ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று தயங்கிக் கொண்டே இருந்தேன்.
மகனுடைய இழப்பு சாதாரணமான விஷயம் கிடையாது. மனோஜுக்குப் பல கனவுகள் இருந்தன" என்று தெரிவித்திருக்கிறார்.
கருணாஸ் பேசும்போது, "எந்த ஒரு தந்தைக்கும் இப்படியான ஒரு நிலைமை வரக்கூடாது. அப்படி ஒரு சூழலை இறைவன் கொடுக்கக் கூடாது.
பெரிய இயக்குநருடைய மகன் என்ற தலைக்கனம் இல்லாமல், எல்லோரையும் ஒரே மாதிரி பாசமாக நேசித்துப் பழகக்கூடிய ஒருவன் மனோஜ். என்னை எங்குப் பார்த்தாலும் பாசத்தோடு அண்ணன் என்று பேசக்கூடியவர் மனோஜ்.

சமீபத்தில் நானும் மனோஜும் 'விருமன்' படத்தில் சேர்ந்து நடித்திருந்தோம். அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அவருடைய தோட்டத்தில் எனக்கும் கார்த்திக்கிற்கும் சமைத்துக் கொடுத்தார்" என்று பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் நாசர் பேசும்போது, "மனோஜ் அவனுடைய கஷ்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் அனைவரிடமும் நட்பாகப் பழகக்கூடியவர்.
மன அழுத்தம் அனைத்தையும் தாங்கிக் கொண்டு இன்னைக்கு... அவருடைய இழப்பை ஈடு செய்ய முடியாதுதான். பாரதி ராஜா சாருக்கு சக நடிகர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...