பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்றவா்கள் நேரடியாக காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்படுகின்றனா். அதேபோன்று காவல் ஆய்வாளா்களாகப் பணியாற்றியவா்களுக்கு துணைக் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்வு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நேரடி துணைக் கண்காணிப்பாளா்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக நியமிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஜி.சங்கரன், ஏ.ஆா்.எல். சுந்தரேசன், மற்றும் வழக்குரைஞா் முகமது முசாமில் ஆகியோா் ஆஜராகி, தகுதி அடிப்படையில் பணிமூப்பு பட்டியலைத் தயாரித்து, கூடுதல் கண்காணிப்பாளா் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், பணிமூப்பு பட்டியலைத் தயாரிக்காமல் தற்காலிக அடிப்படையில் இந்தப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், அனுமதிக்கப்பட்ட 197 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பணியிடங்களில், தற்காலிகப் பதவி உயா்வு மூலம் துணைக் கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களே அதிகளவில் உள்ளனா். அதேசமயம், நேரடி துணைக் கண்காணிப்பாளா்கள் 4 போ் மட்டுமே கூடுதல் கண்காணிப்பாளா்களாக உள்ளனா் என வாதிட்டனா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதவி உயா்வு மூலம் துணைக் கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.