செய்திகள் :

`விமான பயணம்; சென்னை ரூட் மேப்’ - என்கவுன்ட்டர் செய்யப்பட்ட `இரானி’ கொள்ளையன் ஜாபரின் பகீர் பின்னணி

post image

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகம் எதிரில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரா, கடந்த 25-ம் தேதி காலை 6 மணியளவில் நடந்துச் சென்றார். அப்போது ஹெல்மெட், முகமுடி அணிந்து பைக்கில் வந்த இருவர், இந்திரா அணிந்திருந்த 2 சவரன் செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த இந்திரா, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அடுத்தடுத்து செயின் பறிப்பு

அதுதொடர்பாக போலீஸார் விசாரித்துக் கொண்டிருந்தபோது சென்னை சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில் வாக்கிச் சென்ற அடையாறு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி அம்புஜம்மாளிமிருந்து 3 சவரன் செயின் பறிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து அடுத்த 15-வது நிமிடத்தில் இந்திரா நகர், 29-வது குறுக்குத் தெருவில் நடந்துச் சென்ற திருவான்மியூரைச் சேர்ந்த லட்சுமி என்பவரிமிருந்து 8 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டது.

பின்னர் வேளச்சேரி டான்சி நகரில் மேடவாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி விஜயா என்பவரிடமிருந்து இரண்டு சவரன் செயின் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விஜயா நகர் வடக்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகம்மாளிடம் 3 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டது. அடுத்து கிண்டி புத்துக்கோயில் அருகில் மூதாட்டி நிர்மலா என்பவரிடம் 10 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டது.

செயின் பறிப்பு சம்பவங்கள் முழுவதும் தென்சென்னையிலேயே அடுத்தடுத்து நடந்ததால் காவல்துறையினரின் வாக்கி டாக்கிகள் அலறின. ஒரே நாளில் ஆறு பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரிகள் ஆக்‌ஷனில் களமிறங்கினர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக்

உடனடியாக வாகனச் சோதனை, சி.சி.டி.வி-க்கள் ஆய்வு செய்து செயின்பறிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக், கர்நாடகா மாநில பதிவு நம்பர் எனத் தெரியவந்தது. அதோடு கொள்ளையில் ஈடுபட்டவர்களின் டிரஸ் கோடிங்கை சி.சி.டி.வி-யில் பார்த்த தனிப்படை போலீஸார், இது வடமாநில கொள்ளையர்கள் என்பதை உறுதிப்படுத்தினர்.

விமான நிலையத்தில் கைது

அதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றிலும் போலீஸார் கண்காணித்தனர். இந்தச் சமயத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்கள், சென்னை விமான நிலையம் நோக்கி செல்லும் சி.சி.டி.வி காட்சி தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக விமான நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டிக்கு செல்போனில் தகவல் தெரிவித்த தனிப்படை போலீஸார், விமான நிலையத்தில் கடைசி நேரத்தில் போர்டிங் பாஸ் வாங்கியவர்களின் விவரங்களைச் சேகரிக்கக் கூறினர்.

மேலும் சி.சி.டி.வி-யில் பதிவான கொள்ளையர்களின் போட்டோஸ்களையும் இன்ஸ்பெக்டர் பாண்டிக்கு தனிப்படை போலீஸார் அனுப்பி வைத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையிலான போலீஸ் டீம் விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி-க்களை ஆய்வு செய்தபோது உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஜாபர் குலாம், உசேன் இரானி என்பவரும் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மீசாமும், துஷ்வாசம் மேசம் இரானி என்பவரும் அவசர அவசரமாக விமான நிலையத்துக்குள் வருவதும் அங்கு போர்டிங் பாஸ் வாங்கிய தகவலும் தெரிந்தது.

இதில் ஜாபரை விமான நிலைய பகுதியிலேயே போலீஸார் மடக்கிப் பிடித்தனர். மற்றொரு கொள்ளையனான மீசாமும், ஐதராபாத் செல்லும் விமானத்தில் ஏறியிருந்தார். உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கும் அங்கு பாதுகாப்பு பணியிலிருக்கும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்த இன்ஸ்பெக்டர் பாண்டி, அவரை விமானத்திலிருந்து கீழே இறக்கி அழைத்து வந்தார். அதற்குள் இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீஸ் டீம், விமான நிலையத்து வர, இரண்டு கொள்ளையர்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜாஃபர்

நகையுடன் ரயிலில்...

இரண்டு கொள்ளையர்களிடம் விசாரித்தபோது செயின் பறிப்பில் கிடைத்த தங்க நகைகளோடு இன்னொரு கொள்ளையன் சல்மான், ரயில் மூலம் செல்லும் தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீஸார், ஆந்திர மாநிலம் ஓங்கோல் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரின் உதவியால் பிடித்தனர். அவரை சென்னைக்கு தனிப்படை போலீஸார் அழைத்து வருகின்றனர். இதற்கிடையில் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பைக்கை, தரமணி ரயில் நிலைய பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக ஜாபர் தெரிவித்தார்.

சிசிடிவி

அவரை 26-ம் தேதி அதிகாலையில் போலீஸார் அழைத்துச் சென்றபோது பைக்கில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த ஜாபர், போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். உடனே திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, கொள்ளையன் ஜாபரை சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால் ஜாபர், போலீஸார் நோக்கி சுட்டதால் பாதுகாப்புக்காக இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, கொள்ளையன் ஜாபரை துப்பாக்கியால் சுட்டார். அவரின் மார்பு பகுதியில் குண்டு துளைத்து சம்பவ இடத்திலேயே ஜாபர் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீஸார், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இரானி கொள்ளையன் ஜாபர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவத்தைக் கேள்விபட்ட மற்ற கொள்ளையர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதைத் தொடர்ந்து தங்களின் கொள்ளை திட்டம் குறித்து விரிவாக தனிப்படை போலீஸாரிடம் தெரிவித்தனர். அதோடு 27 சவரன் தங்க நகைகளையும் தனிப்படை போலீஸார் இரானி கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த போலீஸ் கமிஷனர் அருண், ``இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஈரானி கொள்ளையர்களில் இருவர் விமானம் மூலம் கடந்த 25-ம் தேதி சென்னை வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பைக், ஹெல்மெட்டை இன்னொரு கொள்ளையன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். விமான நிலையத்திலிருந்து பைக்கில் புறப்பட்ட கொள்ளையர்கள், காலை 6 மணிக்கே சைதாப்பேட்டையில் தங்களின் முதல் செயின் பறிப்பு சம்பவத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

அதன்பிறகு அடுத்தடுத்து செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு கிண்டியில் இறுதியாக ஒரு பெண்ணிடம் செயினைப் பறித்திருக்கிறார்கள். பின்னர் திட்டமிட்டபடி தனித்தனி விமான நிலையத்தில் மும்பை, ஐதராபாத்துக்குச் செல்ல விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள். அங்கு மூன்றாவது கொள்ளையனும் வந்திருக்கிறார். மூன்று பேரும் கொள்ளையடித்த தங்க நகைகளைப் பங்கு போட்டு பிரித்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

முதல் செயின் பறிப்பு சம்பவம் நடந்ததும் தனிப்படைகள் அமைத்து அவர்களைத் தீவிரமாக தேட தொடங்கினோம். அதனால்தான் விமான நிலையத்துக்குள் வைத்து ஜாபர், மீசாமும் ஆகிய இரண்டு கொள்ளையர்களைப் பிடித்துவிட்டோம். ரயிலில் தப்பிச் சென்ற சல்மானையும் கைது செய்துள்ளோம்.

இரானி கொள்ளையர்கள்

இந்த இரானி கொள்ளையர்கள் பெரும்பாலும் கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடிப்பதில் ஸ்பெஷலிஸ்ட். தற்போது செயின் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தக் கொள்ளை கும்பலின் நெட்வொர்க் குறித்து வடமாநிலங்களில் விசாரித்து வருகிறோம். பைக்கை எடுக்கச் சென்ற இடத்தில் கொள்ளையன் ஜாபருக்கும் தனிப்படை போலீஸாருக்கும் நடந்த மோதலில் ஜாபர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொள்ளைக் கும்பலிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியையும் பைக்கையும் பறிமுதல் செய்திருக்கிறோம்.

கொள்ளையர்கள் செயின் பறித்ததில் மூதாட்டி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையை பொறுத்தவரை கடந்த ஆண்டு 34 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில் 33 சம்பவங்களில் கொள்ளையர்களை கைது செய்து விட்டோம். அதைப் போல இந்தாண்டு ஏழு செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில் குற்றவாளிகளை கைது செய்துவிட்டோம்.

தற்போது கைதாகியிருக்கும் இரானி கொள்ளையர்களுக்கு சென்னையின் ரூட் மேப் ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதுதொடர்பாகவும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

கமிஷனர் அருண்

தனிப்படை போலீஸாரிடம் விசாரித்தோம். ``என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இரானி கொள்ளையன் ஜாபர் மீது வடமாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரானி கொள்ளையர்களைப் பொறுத்தவரை கொள்ளையடிப்பது ஒரு டீம். அதை விற்பது இன்னொரு டீம். இவர்களுக்காக வழக்குகளில் வாதாட தனி வழக்கறிஞர் டீம் என மூன்று குழுக்கள் இருக்கும்.

இவர்கள் இந்தியா முழுவதும் சென்று குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் நகை, பணம் ஆகியவை செலவாகும் வரை தலைமறைவாகவே இருப்பார்கள். குற்றச் செயலில் ஈடுபடும்போது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டாலும் மற்றவர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். அவர்களின் பகுதிக்குச் சென்று கொள்ளையர்களைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்தளவுக்கு ஈரானி கொள்ளையர்களின் நெட்வொர்க் வைத்திருக்கிறார்கள்.

அதோடு விமானத்தில் வந்து ஹைடெக்காக கொள்ளையடித்துவிட்டு தப்பிச் செல்வார்கள். இரானி கொள்ளை நெட்வொர்க்கில் ஜாபர், மூன்றாவது இடத்திலிருப்பவர். அதனால் இந்த நெட்வொர்க்கை முழுமையாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம். தாம்பரம் கமிஷனர் அலுவலக பகுதிகளில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்களிலும் இந்தக் கொள்ளைக் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது” என்றனர்.

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீச... மேலும் பார்க்க

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்த... மேலும் பார்க்க

`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்

இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராக... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க