கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!
கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து தனிப்படை காவல்துறை நடத்திய விசாரணையில் 7 பேர் கொண்ட முக்கிய நெட்வொர்க் கைது செய்யப்பட்டுள்ளது.
கால் டாக்ஸி தொழில் செய்து வரும் பி.காம் பட்டதாரி மணிகண்டன், ரேபிடோ ஓட்டுநர் விநாயகம், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பி.எஸ்சி பட்டதாரி கிருஷ்ணகாந்த், பி.இ பட்டதாரியும், கிரிக்கெட்டருமான மகாவிஷ்ணு, பி.இ பட்டதாரியும், சுய தொழில் செய்பவருமான ஆதர்ஷ், பி.காம் பட்டதாரியும்,

உணவு தொழில் செய்து வருபவருமான ரிதேஷ் லம்பா, பி.பி.எம் பட்டதாரியும் ஜவுளி வர்த்தகருமான ரோஹன் ஷெட்டி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மகாவிஷ்ணு என்பவர் பெண் காவல் உதவி ஆய்வாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மும்பை, இமச்சால் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பல்வேறு உயர் ரக போதை பொருள்களை ஆர்டர் செய்து கூரியரில் வரவழைக்கிறார்கள். பிறகு அதை ஐடி ஊழியர்கள், பப்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இதை செய்து வருகின்றனர். இவர்களிடமிருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான போதை பொருள்கள், 12 செல்போன்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “போதை பொருள் விற்பனைக்காக இந்த நெட்வொர்க் குறிப்பிட்ட சில வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தியுள்ளனர். இதில் கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதன் மூலம் இந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கோவைப்புதூர் பகுதியில் வீடு கட்டியுள்ளார்.

மேலும் சிலர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் நிலம் வாங்கியும், வீடு கட்டியும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். இவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றனர்.