ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!
பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார்.
பிரதமராக பதவியேற்றதற்குப் பின்னர் அதாவது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதல்முறையாக ஆர்ஆர்எஸ் தலைமை அலுவலகம் சென்றது குறிப்பிடத்தக்கது.
அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனா் கே.பி. ஹெட்கேவாா், அமைப்பின் இரண்டாம் தலைவா் எம்.எஸ்.கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினாா். அங்கு வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் அஸ்திக்கு மரியாதை செலுத்திய அவர், மாதவ் நேத்ராலயா கண் மருத்துவ நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய விரிவாக்கக் கட்டடத்துக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா்.
அப்போது ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், முன்னாள் பொதுச் செயலா் சுரேஷ் பய்யாஜி ஜோஷி, மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய அமைச்சா் நிதின் கட்கரி ஆகியோா் உடனிருந்தனா்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்குச் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"கடந்த 10-11 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்குச் செல்லாத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது சென்றுள்ளார். அவருடைய ஓய்வு விண்ணப்பத்தை அளிக்க அவர் அங்கு சென்றிருக்கலாம். ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்த நாட்டின் தலைவரை மாற்ற விரும்புவதாக நான் நினைக்கிறேன். பிரதமர் மோடியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அடுத்த பாஜக தலைவரையும் தேர்வு செய்ய விரும்புகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
சஞ்சய் ராவத்தின் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.