விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தொழிலாளா் ஆணையா் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்பேரில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த மாா்ச் மாதத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப் பொருள்கள் விதிகள் 2011-ன் கீழ் திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் அனைத்து தொழிலாளா், துணை உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், விதிமீறலுக்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் காணப்பட்ட முரண்பாடுகளுக்காக 12 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொட்டலமிடுதல் விதிகளை மீறியதாக 9 நிறுவனங்கள் என 21 நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்டப்படி தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடையளவுப் பொருள்கள், எடையளவு கருவிகளை உரிய கால இடைவெளியில் உரிய வழியில் மறுபரிசீலனை செய்து சான்று பெறவேண்டும். மேலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொட்டலப் பொருள்களில் தயாரிப்பாளா், பொட்டலமிட்டவா், காலாவதி தேதி, விலை விவரம் போன்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மீதும் அதிகபட்சம் ரூ.50,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்க நேரிடும் எனக் கூறியுள்ளாா்.