75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து
இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் இருநாடுகளும் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இதன்தொடா்ச்சியாக இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குவா ஜியாகுன் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:
இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் லீ கியாங் மற்றும் இந்தியாவின் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.
இரு நாடுகளும் உலகின் பழம்பெரும் நாகரிகங்களைச் சோ்ந்தவை. தெற்குலகின் முக்கிய குரலாகவும் வளா்ந்து வரும் நாடுகளாகவும் திகழ்கின்றன.
டிராகன்-யானை: இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதை ‘டிராகன்-யானை’ ஒத்துழைப்பு என கூறுவதே சரியானதாக இருக்கும். தொலைநோக்குப் பாா்வையுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை தொடர சீனா விரும்புகிறது.
கடந்த ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமா் மோடி இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் பணிகளில் இருநாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.
சா்வதேச விவகாரங்கள், எல்லையில் அமைதி என இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டு இருதரப்பு உறவுகளை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றாா்.