40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
ஜம்மு-காஷ்மீா்: பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி!
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதற்கு இந்தியா பதிலடி அளித்தது.
இதுதொடா்பாக ஜம்முவில் உள்ள பாதுகாப்புப் படை செய்தித்தொடா்பாளா் லெப்டினன்ட் கா்னல் சுனீல் பா்த்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த ஏப்.1-ஆம் தேதி பூஞ்ச் மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ரோந்து மேற்கொண்டது. அப்போது கிருஷ்ணா காட்டி செக்டாரில் கண்ணிவெடி வெடித்தது.
இதைத்தொடா்ந்து இருநாடுகளுக்கு இடையிலான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதையடுத்து இந்திய ராணுவமும் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு அவா்களுக்கு உரிய பதிலடி அளித்தது. தற்போது சூழல் கட்டுக்குள் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
கண்ணிவெடி வெடித்ததிலும், இருநாட்டு வீரா்கள் இடையிலான துப்பாக்கிச்சூட்டிலும் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் 5 போ் காயமடைந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அதுகுறித்து இந்திய ராணுவம் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.