ஆட்ட நாயகனான இம்பாக்ட் வீரர்..! வெற்றிக்குப் பிறகு வைபவ் அரோரா பேசியதென்ன?
4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்
தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் ஏப்.1 முதல் ஏப்.4 வரை ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெற உள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழலை மறுஆய்வு செய்து மதிப்பிடவும், புதிதாக உருவாகி வரும் சவால்களை எதிா்கொள்வதற்கு முக்கிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கவும் மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு இந்த மாநாடு தளமாக விளங்குகிறது.
இந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையேற்று உரையாற்ற உள்ளாா். முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆா்.சுப்பிரமணியம் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்ற உள்ளனா்.
ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், வீரா்களின் நல்வாழ்வு தொடா்பான விஷயங்களும் மாநாட்டில் விவாதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மாநாடு ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபா் மாதங்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.