பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டியில் தயாராகும் தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?
சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேரவையில் இன்று பதில் அளித்துள்ளார்.
அவர் அளித்த பதிலில், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை தங்களின் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவு பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ஆம் இடத்தில் உள்ளது. கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப்பழம் - முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், இராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, பெரம்பலூர் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கபட்டுள்ளது. இதற்கு முன்பாகவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி பணங் கருப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கபட்டுள்ளது.
மேலும், செட்டிநாடு கைமுறுக்கு - சீடை, கோவில்பட்டி சீவல், இராமநாதபுரம் பட்டறை கருவாடு - பனங்கற்கண்டு ஆகியவற்றிற்க்கு MSME துறையின் - தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் TNAPEX மூலம் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கபட்டுள்ளது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும்.
அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் தீப்பெட்டி தொழிலை பொருத்தமட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் 566 நிறுவனங்களும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், சுமார் 400 நிறுவனங்களும், தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதோடு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தீப்பெட்டிகளின் தனித்துவத்தை உலகம் முழுவதும் அறிய செய்யவும், விற்பனையை அதிகரிக்கவும் MSME துறையின் சார்பில் ஆல் இந்தியா சேம்பர் ஆப்-மேட்ச் பேக்டரி – சிவகாசி, தமிழ்நாடு சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் – சிவகாசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கான செலவினத்தில் 50 சதவிகிதத் தொகையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் மானியமாக வழங்கப்படும் என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சங்க உறுப்பினர்கள் தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யபடும் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கிடைக்க பெறவில்லை. ஆவணங்கள் கிடைக்க பெறும் பட்சத்தில் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தங்களின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உரிமங்கள் / தடையில்லா சான்றுகளை ஒரே இடத்தில் பெற முதல்வர் அவர்களால் 2021 ஆம் ஆண்டு ஒற்றைச் சாளர இணைய தளம் Single window Portal 2. ஓ தொடங்கப்பட்டது. இந்த தளத்தின் மூலம் இதுவரை 73 ஆயிரத்து 288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 66 ஆயிரத்து 595 உரிமங்கள்/ தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
பேரவை உறுப்பினர் அவர்கள் கோரிய பொட்டாஷியம் குளோரேட் மற்றும் சல்பர் பயன்படுத்தவும், இருப்பு வைக்கவும், கொண்டு செல்வதற்குமான உரிமம் பெறுதல் / புதுப்பித்தல், தடையில்லா சான்றிதழ்கள் ( N.O.C ) படை கலச் சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. வழங்கப்படும் உரிமங்களும், சான்றிதழ்களும் வருவாய் துறை சம்மந்தப்பட்டதால், அந்த துறையுடன் கலந்து ஆலோசித்து ஓற்றைச் சாளர இணையத் தளம் Single window Portal 2. ஓ மூலம் வழங்குவதற்கு பரிசீலனை செய்யப்படும் கடலுர் பகுதியில் பலா, கொய்யா பழங்கள் பதப்படுத்தும் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு அரசு வங்கி கடனுதவியுடன் மானியங்கள் வழங்கப்படும் தீப்பட்டி தொழில் குறித்த 100 ஆண்டு ஆவணங்களை முறைப்படுத்தி வழங்கும் பட்சத்தில் புவிசார் குறியீடு பெற பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.