இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
வயிற்று வலி; ஏர்போர்ட் கழிவறைக்கு சென்று குழந்தைபெற்று குப்பை தொட்டியில் போட்ட கல்லூரி மாணவி
மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் கிடந்தது. அதனை பார்த்த துப்புரவு தொழிலாளி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பிறந்தவுடன் குழந்தை குப்பை தொட்டியில் போடப்பட்டு இருந்தது. நான்கு நாட்களுக்கு முன்பு இக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விமான நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கழிவறையில் சென்று குழந்தை பெற்றுக்கொண்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டது. கழிவறையில் குழந்தை பெற்று அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்டுவிட்டு ராஞ்சி சென்ற விமானத்தில் ஏறிச்சென்றது 16 வயது மைனர் பெண் என்று விசாரணையில் தெரிய வந்தது.

அப்பெண்ணும், அவரது தாயாரும் மும்பை விமான நிலையத்திற்கு ஒன்றாக வந்திருந்தனர். விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அவர்கள் இரண்டு பேரும் விமான நிலையத்திற்கு வந்தனர். இது குறித்து விமான நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,''இரண்டு பேரும் விமான நிலையத்தில் இருந்தபோது மைனர் பெண்ணிற்கு வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்த கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறையில் குறைபிரசவத்தில் அப்பெண்ணிற்கு பிரசவம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் போட அப்பெண்ணின் தாயார் உதவி செய்துள்ளார். குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததா அல்லது முழுமையாக வளர்ச்சியடைந்து பிறந்ததா அல்லது இறந்து பிறந்ததா என்பது குறித்து பிரேத பரிசோதனையில் தெரிய வரும்.
சம்பந்தப்பட்ட பெண் மைனர் என்பதால் அப்பெண்ணின் காதலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மைனர் பெண் கர்ப்பமாக இருந்தது அவரது தாயாருக்கும் தெரிந்திருக்கிறது. மைனர் பெண் கல்லூரியில் படித்து வருகிறார். குழந்தையை கழிவறையில் போட்ட பிறகு வேறு உடையை மாற்றிக்கொண்டு இருவரும் விமானத்தில் ஏறி சென்றுவிட்டனர்''என்றார்.
அப்பெண்ணின் தாயார் இது குறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில், `தனது மகள் 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியும். எனவேதான் ராஞ்சியில் நடக்கும் குடும்ப நிகழ்ச்சிக்கு ரயிலில் செல்லாமல் விமானத்தில் செல்ல முடிவு செய்தோம்''என்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு கீழே விழுந்துவிட்டதாக மைனர் பெண் தெரிவித்துள்ளார். இரண்டு பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களிடம் வாக்குமூலம் வாங்கிக்கொண்டு அவர்களை வீட்டுக்கு செல்ல போலீஸார் அனுமதித்தனர்.