சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி 36 செல்போன்கள் மற்றும் ஒரு ஐபேட் ஆகியவை திருட்டு போனது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இணை கமிஷனர் விஜயகுமார் ஆலோசனையின் பேரில் துணை கமிஷனர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
தனிப்படை போலீஸார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதோடு ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி செல்போன் திருடர்களை தனிப்படை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக துணை கமிஷனர் ஜெயசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``கிரிக்கெட் போட்டியின் போது 20-க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் செல்போன்கள் திருட்டு போனதாக புகாரளித்திருந்தனர். கிரிக்கெட் போட்டியையொட்டி ஏற்கெனவே ஏ.ஐ தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திய சிசிடிவி கேமராக்களை அங்கு வைத்திருந்தோம். அதன்மூலம் செல்போன் திருடர்கள் குறித்த தகவல்கள் எங்களுக்கு ஏ.ஐ மூலம் கிடைத்தன. அதைத் தொடர்ந்து வேலூரில் இரண்டு லாட்ஜ்களில் தங்கியிருந்த 4 சிறுவர்கள் உட்பட எட்டு பேரை கைது செய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து 36 செல்போன்கள் ஒரு ஐ பேட் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். ஏற்கெனவே பெங்களூருவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இவர்கள் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
தனிப்படை போலீஸார் கூறுகையில், ``செல்போன்களைத் திருடிய குற்றத்துக்காக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நொய்யா, விஷால் குமார் மொஹோத், கோபிந்குமார், ஆகாஷ் நொனியா, மற்றும் 17 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் என எட்டு பேரை வேலூரில் வைத்து பிடித்தோம். இவர்கள் எட்டு பேரும் கூட்ட நெரிசலின்போது பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி திருடுவதை தொழிலாக கொண்டவர்கள். இதற்காக ஜார்க்கண்டிலிருந்து வேலூரில் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் வேலூரில் அறை எடுத்து தங்குவதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் சென்னைக்கும் பெங்களுருக்கும் செல்ல வேலூரிலிருந்து எளிதில் செல்லலாம்.

கிரிக்கெட் போட்டியை காண சென்ற ரசிகர்கள், தங்களுக்குப் பிடித்தமான ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்தாலே தங்களை மறந்து கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள். அதோடு சிக்ஸர் அடித்துவிட்டால் போதும் மெய்மறந்து போய்விடுவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திதான் இந்த செல்போன் திருட்டு கும்பல் கைவரிசை காட்டியிருக்கிறது. மைதானத்தில் எல்லோரும் கைதட்டி உற்சாகமாக இருக்கும் போது செல்போன் திருடர்கள் மட்டும் ஆங்காங்கே நகர்ந்து செல்லும் காட்சிகளை ஏ.ஐ தொழில்நுட்பம் எங்களுக்கு சரியாக காட்டிக் கொடுத்ததால்தான் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடிந்தது. அதோடு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பதையும் ஏ.ஐ தொழில்நுட்பம் எங்களுக்கு தனியாக காட்டியது. சென்னை சிங்கம் ஐ.பி.எல் என்ற க்யூ ஆர் கோடு மூலமாகவும் செல்போன்களை இழந்தவர்களுக்கு எங்களால் உதவ முடிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனி வரும் கிரிக்கெட் போட்டிகளிலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" என்றனர்.