சென்னை: தனியாக இருந்த நர்ஸிடம் அத்துமீறல்; பைக்கை வைத்து குற்றவாளியைப் பிடித்த போலீஸ்; என்ன நடந்தது?
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றுபவர்கள் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வருகிறார்கள்.
ஷிப்ட் அடிப்படையில் நர்ஸ்கள் வேலை பார்த்து வருவதால் அந்த வீட்டில் எப்போதும் யாராவது ஓய்வு எடுப்பதுண்டு. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி பிற்பகலில் நர்ஸ்கள் தங்கியிருக்கும் வீட்டின் கதவு தட்டிப்பட்டிருக்கிறது.
அதனால் ஷிப்ட் முடிந்து யாராவது வந்திருப்பார்கள் எனக் கருதிய 20 வயது மதிக்கத்தக்க நர்ஸ் ஒருவர் கதவைத் திறந்திருக்கிறார். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், நர்ஸின் வாயைப் பொத்தியபடி அவரை வீட்டுக்குள் தள்ளியிருக்கிறார்.
பின்னர் அந்த இளைஞர் நர்ஸை கட்டிப்பிடித்து அநாகரீகமாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த நர்ஸ், இளைஞருடன் போராடியதோடு சத்தம் போட்டிருக்கிறார்.

யாராவது வந்துவிடுவார்கள் எனக் கருதிய அந்த இளைஞர், நர்ஸை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் நடந்த சம்பவத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் நர்ஸ் கூறியிருக்கிறார்.
இதையடுத்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் இரவு 9 மணியளவில் புகாரளிக்கப்பட்டது.
பட்டப்பகலில் நர்ஸ் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை, கமிஷனர் அருணின் கவனத்துக்குத் தெரியவந்ததும் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
அதன்பேரில் சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் ஜெரினாபேகம் ஆகியோரின் ஆலோசனை பேரில் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் துரை தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்று பாதிக்கப்பட்ட நர்ஸிடம் முதலில் விசாரித்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின்படி அங்குள்ள சி.சி.டி.வி-க்களை ஆய்வு செய்தனர்.
அப்போது இளைஞர் ஒருவர் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவரை சி.சி.டி.வி-க்களின் உதவியோடு போலீஸார் பின்தொடர்ந்த போது அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து சிறிது தூரத்தில் நிறுத்தியிருந்த பைக்கை அந்த இளைஞர் எடுத்துக் கொண்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்வது தெரியவந்தது.

ஆனால் அந்த இளைஞரின் முகம், பைக்கின் பதிவு நம்பர் ஆகியவைச் சரியாகத் தெரியவில்லை.
இதையடுத்து பைக்கின் அடையாளங்களை வைத்து போலீஸார், அடுத்தடுத்து விசாரித்தபோது அந்த பைக் மீது போக்குவரத்து போலீஸார் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்த விவரம் கிடைத்தது.
அதன்பிறகு அந்த நபரின் வீடு, குன்றத்தூர் முகலிவாக்கம் பகுதியில் இருப்பதைத் தனிப்படை போலீஸார் கண்டறிந்தனர்.
நள்ளிரவே அவரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், வீட்டின் கதவைத் தட்டி விசாரித்தனர். அப்போது துக்க கலக்கத்தில் சிசிடிவியில் பதிவான இளைஞர் யார் நீங்கள் இந்த நேரத்தில் எதற்கு வந்திருக்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.
உடனே போலீஸார் அவரை அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவரிடம் நர்ஸிடம் தவறாக நடக்க முயன்ற விவரத்தைக் கூறி விசாரித்தனர்.
முதலில் நான் அவன் இல்லை என அந்த இளைஞர் மறுத்திருக்கிறார் .பின்னர் போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் காண்பித்து விசாரித்தனர். அதன்பிறகே இளைஞர் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் புரூஸ்லி பூபதி என்று தெரியவந்தது. 40 வயதான இவர், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய போது நர்ஸ் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அவர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்ததால் அடிக்கடி அவரைச் சந்திக்க மேற்கண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு புருஸ்லி செல்வது வழக்கம். அதைப்போலத்தான் நேற்றும் அங்குச் சென்றிருக்கிறார்.
அப்போது வேறு ஒரு நர்ஸ் இருந்ததால் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். தற்போது புரூஸ்லியை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட புரூஸ்லிக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரின் மனைவியும் அரசு மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரை அழைத்துச் செல்ல பைக்கில் வந்திருந்த புரூஸ்லி, தனக்குத் தெரிந்த நர்ஸை சந்திக்கச் சென்ற இடத்தில்தான் இந்த பாலியல் சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே புரூஸ்லியைக் கைது செய்துவிட்டோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs