தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்
ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,250 - ரெய்டில் சிக்கிய புதுச்சேரி `கோ ஃபிரீ சைக்கிள்’
அயல் நாடுகள் மற்றும் அயல் மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள், இ-பைக், ஆட்டோ, ரிக்ஷா, வாடகை இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் மூலம் சுற்றுலாத்தலங்களை பார்வையிட்டு வருகின்றனர். அதனைப் பயன்படுத்தி `கோ ஃபிரீ சைக்கிள்’ (Go Free Cycles) என்ற சைக்கிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தன்னுடைய அலுவலகத்தை திறந்தது.
அதே வேகத்தில், `புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் சைக்கிள் பயன்படுத்துகிறார்கள். அதனால் எங்களிடம் ரூ.4,50,000 முதலீடு செய்பவர்களுக்கு மாதம் ரூ.52,250/- வருவாயாக கிடைக்கும்’ என்று விளம்பரப்படுத்தியது இந்த நிறுவனம்.

அதிரடி ரெய்டு
அதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிலையில், `அதிக லாபம் கிடைக்கும் என பொதுமக்களுக்கு ஆசை காட்டி, அவர்களை முதலீடு செய்ய வைத்து இந்த நிறுவனம் முறைகேடு செய்கிறது’ என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார்கள் சென்றன.
அதனடிப்படையில் அந்த நிறுவனத்தை சோதனை செய்யும்படி உத்தரவிட்டார் சைபர் கிரைம் எஸ்.பி பாஸ்கரன். அதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் நேற்று இரவு, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கும் `கோ ஃபிரீ சைக்கிள்’ நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்தனர்.
தொடர்ந்து அலுவலகத்தின் அனைத்து கதவுகளையும் மூடி அந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நிறுவனத்தின் ஊழியர்களை வெளியில் அனுப்பாமல் அவர்களிடம் துருவித் துருவி பல்வேறு கேள்விகளை கேட்டனர். தொடர்ந்து அங்கு கட்டுக் கட்டாக இருந்த ரொக்கப் பணத்திற்கு கணக்கு கேட்டனர். அதற்கு அவர்களிடம் சரியான பதில் வராததால், வருவாய் துறைக்கு தகவல் அளித்தனர் சைபர் கிரைம் போலீஸார். வருவாய் துறையினர் வந்தவுடன் அவர்கள் முன்னிலையில் கணக்கில் காட்டப்படாமல் இருந்த ரூ.2 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சைபர் கிரைம் போலீஸார், ``சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக என்று இந்த நிறுவனம் கூறிக் கொண்டாலும், உண்மையில் இவர்கள் குறி வைத்தது பொதுமக்களைத்தான். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஒருவர் ரூ.4,50,000 முதலீடு செய்தால், அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.52,250/- செலுத்துவதாகவும், அதன்பிறகு 9 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் செலுத்திய ரூ.4,50,000 லட்சத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் விளம்பரம் செய்கிறார்கள்.
இவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி புதுச்சேரி – தமிழகம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். அதனடிப்படையில் வந்த புகார்களின் அடிப்படையில்தான் இந்த சோதனையை மேற்கொண்டோம்” என்றனர்.