``காதலனை திருமணம் செய்ய தடையாக இருந்தது, அதனால்..'' - 3 குழந்தைகளை கொன்ற தாய் பகீர் வாக்குமூலம்
பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்களை திடீரென சந்தித்துக்கொண்டால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும். ஆனால் ஆந்திராவில் பள்ளியில் படித்த நண்பனை சந்தித்ததால் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இருக்கும் அமீன்பூர் என்ற இடத்தில் ஆசிரியையாக இருப்பவர் ரஞ்சிதா(30). இவருக்கு சென்னையா(50) என்பவருடன் திருமணமாகி சாய்கிருஷ்ணா(12), மதுபிரியா(10), கெளதம்(8) ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றன.

20 வயது வித்தியாசமுள்ள நபரை திருமணம் செய்து கொண்டதால் ரஞ்சிதா அதிருப்தியில் இருந்தார். ஆனாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.
சமீபத்தில் ரஞ்சிதாவுடன் பள்ளியில் படித்தவர்களின் சங்கமம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டனர். இதில் ரஞ்சிதாவிற்கு அவருடன் பள்ளியில் ஒன்றாக படித்த சிவா (30) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
அந்த அறிமுகத்தை தொடர்ந்து இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டனர். இது நாளடைவில் அவர்களுக்குள் திருமணம் தாண்டிய தொடர்பை ஏற்படுத்தியது.
அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதில் ரஞ்சிதா சிவாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் குழந்தைகள் மற்றும் கணவன் இருப்பதால் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும், அவர்கள் இல்லாவிட்டால் உன்னை திருமணம் செய்வது குறித்து பரிசீலிப்பேன் என்று சிவா தெரிவித்தார்.
இதனால் சிவாவை திருமணம் செய்ய தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட ரஞ்சிதா திட்டமிட்டார்.

3 குழந்தைகளை கொன்ற தாய்
கடந்த 27-ம் தேதி சென்னையா இரவு வேலைக்கு சென்றுவிட்டார். அதனை பயன்படுத்தி மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய ரஞ்சிதா திட்டமிட்டார். இது குறித்து சிவாவை தொடர்பு கொண்டு பேசியபோது தாமதிக்காமல் உடனே குழந்தைகளை கொலை செய்துவிடும்படி தெரிவித்தார்.
இதையடுத்து ரஞ்சிதா முதலில் தனது மூத்த மகன் சாய் கிருஷ்ணாவை டவல் ஒன்றால் மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சுத்திணறடித்து கொலை செய்தார்.
அதனை தொடர்ந்து அதே முறையில் மற்ற இரண்டு குழந்தைகளையும் மூச்சுத்திணறடித்து கொலை செய்தார். காலையில் வேலைக்கு சென்ற கணவன் வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் தயிர் சாதம் சாப்பிட்டதால் மயங்கிவிட்டதாக தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை; போலீஸார் விசாரணை
அதோடு தனக்கும் வயிறு சரியில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு 4 பேரையும் சென்னையா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது மூன்று குழந்தைகளும் ஏற்கெனவே இறந்திருந்தனர். குழந்தைகளை சோதித்து பார்த்தபோது அவர்களது உடம்பில் எந்தவித விஷமும் கலந்திருக்கவில்லை.
இதையடுத்து ரஞ்சிதாவின் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,''குழந்தைகளை பிரேத பரிசோதனை செய்ததில் உணவில் விஷம் கலந்திருந்ததாக தெரியவில்லை. இதையடுத்து ரஞ்சிதாவிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரது காதலனை திருமணம் செய்ய குழந்தைகள் தடையாக இருப்பதாக கருதி அவர்களை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

இக்கொலை குறித்து சிவாவிற்கும் தெரிந்திருக்கிறது. எனவே இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் இதே போன்று நடந்துள்ளது. அதில் குழந்தைகளுக்கு பதில் மனைவிகள் தங்களது காதலன் துணையோடு தங்களது கணவனையே கொலை செய்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களால் ஆண்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் அந்த அச்சம் காரணமாக ஒருவர் தனது மனைவியை அவர் காதலித்த நபருக்கே திருமணம் செய்து வைத்துவிட்டார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
