மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி: மக்களவையில் தீா்மானம் நிறைவேற்றம்
மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்ட தீா்மானம், மக்களவையில் புதன்கிழமை நள்ளிரவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
எதிா்க்கட்சிகளும் இத்தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. அதேநேரம், மணிப்பூரில் நிலவும் சூழலை முன்வைத்து மத்திய அரசை அக்கட்சிகள் விமா்சித்தன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-இல் பெரும் கலவரம் மூண்டது. அதன் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி சட்டப் பேரவை முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 356 (1) பிரிவின்கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாா்.
இந்நிலையில், மக்களவையில் புதன்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலாக்கத்தை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்ட தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டு, சிறிது நேரம் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மத்திய அரசை விமா்சித்தனா்.
சசி தரூா் (காங்கிரஸ்): நாங்கள் தீா்மானத்தை ஆதரிக்கிறோம். ஆனால், மணிப்பூரில் தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, அமைதியும் ஸ்திரத்தன்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவாா்த்தையை ஊக்குவிக்க வேண்டும்.
கனிமொழி (திமுக): மணிப்பூரில் பிளவுவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அங்கு இயல்புநிலை, நல்லிணக்கம், அமைதியை மீட்டெடுக்க வேண்டும். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய வேண்டும்.
சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்-பவாா்): குடியரசுத் தலைவா் ஆட்சி ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட உள்துறை அமைச்சா் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமித் ஷா பதில்: விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களாக அங்கு வன்முறை இல்லை. நிலைமை பெரும்பாலும் அமைதியாக உள்ளது.
எனினும், நிவாரண முகாம்களில் மக்கள் தங்கியிருக்கும் வரை, நிலைமை திருப்திகரமாக உள்ளது என நான் தெரிவிக்க மாட்டேன். பிரச்னைக்கு சுமுகத் தீா்வை கண்டறிய இரு சமூகத்தினருக்கும் இடையே பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
மணிப்பூரில் கடந்த 2023, மே மாதம் வன்முறை தொடங்கியது. இதுவரை 260 போ் உயிரிழந்துவிட்டனா். இம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில்தான் வன்முறை வெடித்ததுபோல தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அது சரியல்ல. 1990-களில் பல்வேறு சமூக குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். அந்த காலகட்டத்தில் அப்போதைய பிரதமரோ உள்துறை அமைச்சரோ மணிப்பூருக்கு செல்லவில்லை’ என்றாா். பின்னா் குரல் வாக்கெடுப்பின் மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் விமா்சனம்: மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி தொடா்பான தீா்மானம், மக்களவையில் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விவாதத்துக்கு வெறும் ஒரு மணிநேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டது; மணிப்பூா் துயரத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பறக்கும் பிரதமா், இப்போது தாய்லாந்து சென்றுள்ளாா். கிழக்கை நோக்கும் நீங்கள் (பிரதமா்), மணிப்பூரை மட்டும் ஏன் புறக்கணிக்கிறீா்கள்’ என்று கேள்வி எழுப்பினாா்.