எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பிரதமரின் இலங்கைப் பயணம்!
ம.ஆ. பரணிதரன்
இலங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் மேற்கொள்ளவுள்ள மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிரதமரான பிறகு 2019-இல் இலங்கைக்கு மோடி சென்றார். அதன் பிறகு அந்நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது. இடைப்பட்ட ஆண்டுகளில் இரு தரப்பும் புவிசார் அரசியல், பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் பொருளாதார ரீதியிலான பல மாற்றங்களைச் சந்தித்துள்ளன.
வரலாற்றுபூர்வ உறவு: இந்தியாவும் இலங்கையும் நீண்ட பொருளாதார வரலாற்றைக் கொண்டவை. இந்தியாவின் முதல் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) இலங்கையுடன் 1998 }இல் கையொப்பமாகி 2000}ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், வர்த்தக புள்ளிவிவரங்களின்படி 2018}இல் 4.67 பில்லியன் டாலராக இருந்த இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 2023 }இல் 3.62 பில்லியன் டாலராக சரிந்தது. இதே காலகட்டத்தில் இலங்கையின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 2018 }இல் 1.32 பில்லியன் டாலரிலிருந்து 2023}இல் 991 மில்லியன் டாலராக குறைந்தது.
பயணத்தின் நோக்கம்: இலங்கையில் ஏப். 5}இல் அதிபர் அநுரகுமார திசாநாயக, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் ஒப்பந்தங்கள் கையொப்பம், முக்கியத் தலைவர்களுடனான சந்திப்புகள் நடக்கின்றன. ஏப். 6}இல் அனுராதபுரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித ஸ்ரீ மகா போதியில் வழிபடுகிறார்.
கொழும்பில் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, காணொலி வாயிலாக திருகோணமலையின் சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டத்தை மோடி தொடங்கி வைக்கிறார். வடகிழக்கு நகரமான திருகோணமலையில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அதனால், இந்த இடத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்தை இந்தியா கேந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது.
மீனவர் பிரச்னை: இலங்கைப் பயணத்தின்போது அந்நாட்டு கடற்படையால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்னையின் தீவிரம் குறித்தும் பிரதமர் மோடி இலங்கை அதிபர் மற்றும் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேசத் திட்டமிட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஏற்கெனவே தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. பிரதமரின் இலங்கைப் பயணத்துக்குப் பிறகு மீனவர் பிரச்னை தொடர்பான தீர்வை எட்டுவதற்கான இரு நாட்டு கூட்டுக்குழு கூட்டத்தை அடுத்த சில வாரங்களில் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே நடந்து வருகின்றன.
சீன அச்சுறுத்தல்: கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை அதிபராக அநுரகுமார திசாநாயக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் டிசம்பரில் அவர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்தியாவைத் தேர்வு செய்தார். ஆனால், இந்தியாவைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு திசாநாயக சென்றதை இந்தியா விரும்பவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கைக்கு பல நூறு கோடி டாலர்கள் மதிப்பிலான கடனை சீனா வழங்கியுள்ளது. முன்னதாக, 2017}ஆம் ஆண்டில் சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், இலங்கை அதன் தெற்கு துறைமுகமான அம்பாந்தோட்டையை பெய்ஜிங்கை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு 1.12 பில்லியன் டாலருக்கு ஒப்படைத்தது.
அந்த துறைமுகத்தை மையமாக வைத்து இலங்கை செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பல்கள், ராணுவ கப்பல்கள் நாள்கணக்கில் முகாமிட்ட செயல்பாடு, தங்களை வேவு பார்க்கும் சீனாவின் முயற்சி என இந்தியா சந்தேகம் எழுப்பியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் சந்திப்பின்போது பரஸ்பர உறவைப் பேண இரு தலைவர்களும் உறுதியளித்துக் கொண்டதை முன்னெடுக்கும் விதமாக இலங்கைப் பயணத்தை பிரதமர் மோடி பயன்படுத்திக் கொள்வார் என்கின்றனர் வெளியுறவு ஆய்வாளர்கள். அதிலும், புவிசார் அரசியல் ரீதியாக அதிபர் திசாநாயக சீனாவுக்கு சென்று திரும்பிய மூன்று மாதங்களுக்குப் பிந்தைய பிரதமர் மோடியின் கொழும்பு பயணம், நட்புறவுக்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க இலங்கைக்கு வழங்கப்படும் வாய்ப்பு என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவின் தேவை: உள்கட்டமைப்பில் சீன முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமாக இருந்தாலும், உள்ளூர் தேவைகளுடன் ஒத்துப்போகும் எண்ம உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவுடனான தனது கூட்டாண்மையை பன்முகப்படுத்த வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது.
பிராந்திய பாதுகாப்பு கண்ணோட்டத்தில், இரு நாடுகளும் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்ற தாக்கம் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதால், பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம் கடலோர கண்காணிப்பு, பேரிடர் தயார்நிலை மற்றும் பரஸ்பர நீலப் பொருளாதார முயற்சிகளை அடுத்த நிலைக்குச் சாத்தியமாக்கலாம்.
இது குறித்து புது தில்லியில் விவரித்த இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளும் இத்தகைய ஓர் ஒப்பந்தத்தை செய்ததன் விளைவாகவே இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் தடம் பதித்து பின்னர் பல வகை தாக்கத்தை இரு தரப்பும் எதிர்கொண்டன என்று நினைவுகூர்ந்தார்.
உலக விவகாரங்கள்: ரஷியா } உக்ரைன் மோதலில் சமநிலையான நிலைப்பாட்டைப் பேணுவதன் மூலம் } ரஷியாவை நேரடியாகக் கண்டிக்க இந்தியா மறுத்த அதேசமயம், "இது போருக்கான சகாப்தம் அல்ல' என்பதை சர்வதேச அரங்கில் தெளிவுபடுத்தியது. இந்த உத்தி ரஷியா, உக்ரைன் ஆகிய இரண்டின் பகைமைக்கும் உள்ளாகாமல் நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய நாடாக இந்தியாவை தொடர்புடைய நாடுகளும் உலக நாடுகளும் பார்க்கத் தூண்டியது.
க்வாட், பிரிக்ஸ் போன்ற உலக நாடுகளின் அமைப்புகளில் இந்தியாவின் செயல்பாடு மற்றும் பங்களிப்புகள், உலகளாவிய ஒழுங்கை வடிவமைப்பதில் அதன் செல்வாக்கை நிலைநாட்டி வருகிறது. குறிப்பாக, இது "குளோபல் சௌத்' எனப்படும் உலகளாவிய தெற்கின் சக்திவாய்ந்த பிரதிநிதியாக இந்தியா தொடர்வதை உறுதிப்படுத்தி வருகிறது.
இந்தப் பின்னணியில் பொருளாதார ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளியாக இந்தியா இலங்கைக்குத் தேவை என்பது தொடர்ந்து உணர்த்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் சீனாவை ஒதுக்கிவிட்டு இந்தியாவைத் தனது உண்மையான கூட்டாளியாக இலங்கை ஏற்பது இயலாது என்பதாலும், முன்னுரிமையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத்தான் என்பதை உறுதிப்படுத்துவதாக அமையும் இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம்!