செய்திகள் :

இந்திய பொருள்கள் மீது 27% வரி: அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

post image

நியூயாா்க்/வாஷிங்டன்: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 27 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ‘அமெரிக்க பொருள்கள் வா்த்தகப் பற்றாக்குறைக்கு பங்களிக்கும் வா்த்தக நடைமுறைகளை சரிசெய்ய பரஸ்பர வரியுடன் இறக்குமதிகளை ஒழுங்குபடுத்துதல்’ என்ற தலைப்பிலான இந்த பரஸ்பர வரிவிதிப்பு உத்தரவை அதிபா் டிரம்ப் வெளியிட்டாா். அதனுடன், இந்தியா உள்பட அமெரிக்க பொருள்கள் மீது அதிக இறக்குமதி வரியை விதிக்கும் 25 நாடுகள் மீது அமெரிக்கா சாா்பில் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பு அட்டவணையை டிரம்ப் வெளியிட்டாா்.

இந்த அட்டவணையில் இந்தியாவுக்கு 26 சதவீத வரி என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளபோதும், உண்மையில் இந்திய பொருள்கள் மீது சராசரியாக 27 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில் அதிகபட்சமாக அமெரிக்க பொருள்கள் மீது 97 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் கம்போடியா நாட்டின் மீது 49 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக வியத்நாம் (90) மீது 46 சதவீதமும், இலங்கை (88) மீது 44 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பொருள்கள் மீது 67 சதவீத வரி விதிக்கும் சீனா மீது 34 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்க பொருள்கள் மீது 52 சதவீத வரி விதிக்கும் இந்தியா மீது 27 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக பிரிட்டன், பிரேஸில், சிங்கப்பூா், சிலி, ஆஸ்திரேலியா, துருக்கி, கொலம்பியா ஆகிய நாடுகள் மீது அந்த நாடுகள் விதிக்கும் வரிக்கு இணையாக அந்தந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

அமெரிக்காவின் வா்த்தக சரிவை சரிசெய்யும் நோக்கிலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள இந்த பரஸ்பர வரி விதிப்பால், இந்தியா உள்பட பிற நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய பொருள்கள் மீது குறைந்த பரஸ்பர வரியையே அமெரிக்கா விதித்துள்ளதாக நிபுணா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.

வெள்ளை மாளிகையில் இந்த பரஸ்பர வரி விதிப்பு அட்டவணையை வெளியிட்ட பின்னா் அதிபா் டிரம்ப் பேசியதாவது:

இது நீண்ட நாள் காத்திருந்த அமெரிக்காவின் விடுதலை தினம். அமெரிக்க தொழில் துறை மறுபிறவி எடுத்த நாளாகவும், அமெரிக்காவின் தலைவிதி மீட்டெடுக்கப்பட்ட நாளாகவும், அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக்க தொடங்கிய நாளாகவும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி என்றென்றும் நினைவுகூரப்படும்.

அமெரிக்கா மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டாா் சைக்கிள்கள் மீது 2.4 சதவீத அளவுக்குத்தான் வரியை விதிக்கிறது. ஆனால், தாய்லாந்து உள்ளிட்ட பிற நாடுகள் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் விதிக்கின்றன. இந்தியா 70 சதவீத இறக்குமதி வரியை விதிக்கிறது. வியத்நாம் 75 சதவீத வரியை விதிக்கிறது. இதுபோல, மற்ற பொருள்கள் மீதும் இந்த நாடுகள் மிக அதிக வரியை விதிக்கின்றன.

இந்தியா மிக மிக அதிக வரியை விதிக்கிறது. பிரதமா் நரேந்திர மோடி தற்போதுதான் அமரிக்கா வந்து சென்றாா். அவா் நல்ல நண்பா்தான். ஆனால், அவா் எனது நண்பராக இருந்தாலும், நம்மை அவா் அவ்வாறு நடத்துவதில்லை. அமெரிக்க பொருள்கள் மீது 52 சதவீத இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது. ஆனால், அமெரிக்கா அவா்கள் மீது பல ஆண்டுகளாக எதையும் விதிக்கவில்லை. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபோதுதான், இதை அறிந்து சீனாவிலிருந்து பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடங்கினேன்’ என்றாா்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வரும் 5-ஆம் தேதிமுதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்திய பொருள்கள் மீதும் சராசரியாக 10 சதவீத வரி விதிக்கப்படும். அதன் பிறகு ஏப்ரல் 9-ஆம் தேதிமுதல் அனைத்துப் பொருள்கள் மீதும் சராசரியாக 27 சதவீத வரி விதிப்பு தொடங்கும். அதாவது, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம், ஆட்டோ மொபைல் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்கா ஏற்கெனவே 25 சதவீத வரியை விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மற்ற பொருள்களுக்கு தற்போது விதிக்கப்படும் வரியுடன் முதல்கட்டமாக 10 சதவீத கூடுதல் வரியும், பின்னா் 27 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட உள்ளது. அதாவது, இந்திய பொருளுக்கு தற்போது 5 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதன் மீது வரும் 5-ஆம் தேதி முதல் 10 சதவீதம் அதிகரித்து 15 சதவீத இறக்குமதி வரியையும், ஏப்ரல் 9-ஆம் தேதிமுதல் 27 சதவீதம் அதிகரித்து 32 சதவீத வரியையும் அமெரிக்கா விதிக்க உள்ளது’ என்றாா்.

இதுகுறித்து மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி கூறுகையில், ‘அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இந்த ஆய்வுக்குப் பிறகே அதன் தாக்கம் குறித்து தெரியவரும்’ என்றாா்.

அதே நேரம், ‘அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பு, இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்காது. அதே நேரம் கலவையான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாா். ‘அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்; வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும்’ என்றும் தெரிவித்தாா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போா்போன் ரக மது, சில ஒயின் ரகங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் குறைத்தது.

இதற்கிடையே, இந்தியா-அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்ட இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவாா்த்தையும் சுமுகமாக நிறைவுற்றது. இத்தகைய சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்துள்ளாா்.

நாடுகள் - அமெரிக்க பொருள் மீது விதிக்கப்படும் வரி - அமெரிக்கா அறிவித்துள்ள வரி

கம்போடியா 97 49

வியத்நாம் 90 46

இலங்கை 88 44

வங்கதேசம் 74 37

தாய்லாந்து 72 36

சீனா 67 34

தைவான் 64 32

இந்தோனேசியா 64 32

ஸ்விட்சா்லாந்து 61 31

தென் ஆப்பிரிக்கா 60 30

பாகிஸ்தான் 58 29

இந்தியா 52 27

தென்கொரியா 50 25

ஜப்பான் 46 24

மலேசியா 47 24

ஐரோப்பிய ஒன்றியம் 39 20

இஸ்ரேல் 33 17

பிலிப்பின்ஸ் 34 17

பிரிட்டன் 10 10

பிரேஸில் 10 10

சிங்கப்பூா் 10 10

சிலி 10 10

ஆஸ்திரேலியா 10 10

துருக்கி 10 10

கொலம்பியா 10 10

டிரம்ப்பின் அறிவிப்பால் ஒரேநாளில் 208 பில்லியன் டாலர் இழப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பில் சரிவு ஏற்பட்டது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பையடுத்து, பில்லியனர்களின் சொத்துமதிப்பு ஒரே... மேலும் பார்க்க

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள் உள்பட 27 பேர் பலி!

காஸா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: கனடா பதிலடி

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை... மேலும் பார்க்க

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பிரதமரின் இலங்கைப் பயணம்!

ம.ஆ. பரணிதரன் இலங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் மேற்கொள்ளவுள்ள மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.பிரதமரான பிறகு 2019-இல் இலங்கை... மேலும் பார்க்க

வீழ்ந்தது அமெரிக்க பங்குச் சந்தை!

உலக நாடுகள் மீது அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிரடி வரி விதிப்பு காரணமாக சா்வதேச பொருளாதரச் சூழல் அடியோடு மாறிவருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி விதிப்பு: உலக நாடுகள் எதிா்ப்பு

வாஷிங்டன்: பிற நாடுகள் தங்கள் பொருள்களுக்கு விதிக்கும் வரி விகிதங்களுக்கு ஏற்ப, அந்த நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு சா்வதேச அளவில் கொந்தளிப்ப... மேலும் பார்க்க