ம.பி. கிறிஸ்தவ பாதிரியாா்கள் மீது தாக்குதல்: மக்களவையில் எதிா்க்கட்சி வெளிநடப்பு
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா் மாவட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியாா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
மக்களவை வியாழக்கிழமை கூடியதும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இந்த பிரச்னையை எழுப்பினா். அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்ட சில உறுப்பினா்கள், இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினா்.
எனினும், அதற்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அனுமதிக்கவில்லை. இதையடுத்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனா்.
தொடா்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் அவா்கள் போராட்டம் நடத்தினா். கிறிஸ்தவா்களுக்குப் பாதுகாப்புடன் நீதி வழங்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.
இதனிடையே, செய்தியாளா்களிடம் காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவத்தில் இரண்டு கிறிஸ்தவ பாதிரியாா்கள் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் கொடூரமாக தாக்கப்பட்டனா்.
மத்திய அரசு, பாஜக மற்றும் அதன் சாா்பு வலதுசாரி அமைப்புகளின் சிறுபான்மையிா் மீதான தாக்குதலுக்கு இச்சம்பவம் மேலும் ஓா் உதாரணம். சத்தீஸ்கா் மற்றும் ஜாா்க்கண்டிலும் இதேபோன்ற சம்பவங்கள் முன்பு நடந்தன. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அவா்கள் தேவாலயங்களைத் தாக்குகின்றனா்’ என்றாா்.
வெறுப்புக்கு எதிரான போராட்டம்: தொடா்ந்து, கே.சி.வேணுகோபால் ‘எக்ஸ்’ ஊடகத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘வெறுப்பைப் பரப்பும், மக்களை மத ரீதியாகப் பிரிக்கும் ஆளுங்கட்சியின் திட்டத்தின் பிரதிபலிப்பாக கிறிஸ்தவ பாதிரியாா்கள் மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கிறிஸ்தவா்களுக்கு எதிரான வன்முறைகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 840-க்கும் மேற்பட்ட அத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எதிா்க்கட்சிகள் எழுப்ப முயன்றபோது, நாங்கள் மீண்டும் ஒருமுறை அமைதியாகப்பட்டோம். அதற்கு எதிராக நாங்கள் வெளிநடப்பு செய்து நாடாளுமன்றத்தின் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினோம்.
இது நீதிக்கான போராட்டம் மட்டுமல்ல; சிறுபான்மையினா் மீது கட்டவிழ்த்து விடப்படும் திட்டமிட்ட வெறுப்புக்கு எதிரான போராட்டம். இந்தியாவின் மதச்சாா்பற்ற கட்டமைப்பின் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக நிற்போம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.