வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?
தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித்தொழிலாளி பெண்களின் வங்கிக் கணக்கை பெற்று, பணத்தை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தேனி சைபர் க்ரைம் போலீஸாரிடம் விசாரித்தோம். ``தேனி ஆலை உரிமையாளர் மகனுக்கு திருமண வரன் தேடி வந்துள்ளனர். அவர்கள் திருமண வரன் தேடும் செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்துள்ளனர். அதில் ஸ்ரீ ஹிரிணி என்ற ஐடியில் இருந்து ஒரு பொருத்தம் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த ஐடியை தொடர்பு கொண்டு பேசி, பிறகு வாட்ஸ்-அப்பில் பழகியுள்ளனர். ஸ்ரீ ஹிரிணி என்ற ஐடியில் பேசியவர், விரைவில் திருமண ஏற்பாடுகளை செய்யலாம், முன்னதாக தான் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டியுள்ளதாகக் கூறி இளைஞரையும் முதலீடு செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் 88.58 லட்ச ரூபாயை இளைஞர் கொடுத்துள்ளார். பிறகு அந்த ஐடியில் பேசியவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் அளித்தார்.
அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட இளைஞர் இரண்டு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியிருக்கிறார். கூலித்தொழிலாளர்களான 2 பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்து அவர்கள் மூலமாக வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். முதலில் இவர்களை ஏமாற்றிய, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகோபால் என்பரை பிடித்தோம்.

மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய யுவராஜ், பத்மநாபன், சிவா ஆகியோரையும் பிடித்தோம். அப்போதுதான் இவர்கள் டெலிகிராம் மூலம் கம்போடியா சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, 3.90 லட்ச ரூபாய் ரொக்கம், 6 போன்கள், 29 டெபிட் கார்டுகள், 18 காசோலை வில்லைகள், 12 வங்கிக் கணக்குகள், 46 சிம் கார்டுகளை, வங்கி கணக்குகள் பற்றி எழுதப்பட்ட 2 டைரிகளை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.