Karnataka Bank Theft: 'Money Heist' பார்த்து SBI வங்கியை கொள்ளை அடித்த மதுரை கும்பல் - பகீர் பின்னணி
மதுரையைச் சேர்ந்த விஜய்குமார், அஜய்குமார் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா தாவங்கேர் மாவட்டத்தில் இருக்கும் நியாமதி தலுகாவிற்கு பிழைப்புக்காகச் சென்று ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளனர்.
கடன் தராத விரக்தி..!
ஸ்வீட் கடை தொழிலை இன்னும் விரிவாக்கம் செய்வதற்காக விஜய்குமார் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நியாமதி SBI வங்கியில் ரூ15 லட்சம் கடன் கேட்டுள்ளார். பல மாதங்களாக அலைந்தும் கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளது என வங்கி விஜய்குமாரின் கடன் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். இது அவருக்கு மனதளவில் பாதிப்பையும், விரக்தியையும் கொடுத்துள்ளது.

இந்த விரக்தியில் நியாமதி தாலுகா SBI வங்கியவே கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள். விஜய்குமார் (30), அவரது சகோதரர் அஜய்குமார்(28), தங்கையின் கணவர் பரமாநந்தா (30) மற்றும் இவர்களுடன் நியாமதி தாலுகாவில் இருக்கும் நண்பர்களான அபிஷேகா (23), சந்துரு (23), மஞ்சுநாத் (32) என மொத்தம் 6 பேர் கூட்டணி போட்டு 9 மாதங்கள் பக்காவாகத் திட்டம் தீட்டியிருக்கின்றனர்.
Money Heist' வெப்சீரிஸ், இன்னும் பல..
வங்கியின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பை ஆராய அடிக்கடிச் வங்கிக்குச் சென்று நோட்டமிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் எப்படி இருக்கிறது, சுற்றியுள்ள சிசிடிவி கண்கானிப்புகள் என அனைத்தையும் நோட்டமிட்டுள்ளனர். வங்கியின் இரும்பு ஜன்னல், கதவு, இரும்பு தங்க சேமிப்பு பெட்டியை தகர்க்க கேஸ் வெல்டிங் கட்டர், சத்தமில்லாமல் இரும்பை அறுக்கும் ஹைட்ராலிக் இரும்பு கட்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். கேஸ் சிலிட்டரில் இருக்கும் சீரியல் நம்பரைக்கூட அடையாளம் தெரியாமல் மறைத்திருக்கின்றனர்.

இந்தத் திட்டத்தைப் போடுவதற்கு வங்கியைக் கொள்ளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'Money Heist' வெப்சீரிஸ், யூடியூப்பில் வீடியோக்கள் பல பார்த்ததாக போலீஸ் விசாரணையில் கூறியிருக்கிறார்கள்.
9 மாதங்கள் உட்கார்ந்து பக்காவாகப் போடப்பட்ட திட்டத்தை அக்டோபர் 28, 2024 அன்று வங்கியின் வார இறுதி விடுமுறையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு செயல்படுத்தியுள்ளார். வங்கியின் ஜன்னலை கட் செய்து உள்ளே நுழைந்து, 17.7 கிலோ தங்கத்தைக் கொள்ளை அடித்துள்ளது விஜய்குமார் டீம்.
போலீஸ் நாய் மோப்பம் பிடித்துவிடக் கூடாது என வங்கி முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டுள்ளனர். வங்கியில் காட்சிகள் பதிவான சிசிடிவியின் DVR, HDD-யையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
`எந்தவித தடயமும் சிக்கவில்லை’
கொள்ளைச் சம்பவத்தின் செய்தி அறிந்து, வழக்குப் பதிவு செய்த கர்நாடகா, நியாமதி காவல்துறை விசாரணை மேற்கொண்டது. ஆனால், எந்தவிதமான தடயமும் சிக்கவில்லை. வங்கியைச் சுற்றியிருக்கும் பல கிலோமிட்டர்களுக்க சிசிடிவியை சோதணை செய்து பார்த்துள்ளனர். பிறகு கர்நாடக மாநிலத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் அனைத்து சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர். அதில் நியாமதி தலுகாவிலிருந்து அடிக்கடி மதுரைக்குச் சென்று வந்த காரின் உரிமையாளரைப் பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில்தான் அனைத்து உண்மைகளும் தெரியவந்துள்ளன.
ஐந்து மாதங்களாக இந்தத் தேடுதல் வேட்டை நடந்துள்ளது. இறுதியாக, இந்த வங்கிக் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது மதுரையைச் சேர்ந்த விஜயகுமார்தான் என்று கைது செய்துள்ளனர்.
கொள்ளை அடித்த தங்கத்தை விஜய்குமார் மதுரை உசிலம்பட்டியில் இருக்கும் விவசாயக் கிணறு ஒன்றில் பதுக்கி வைத்துள்ளார்.
தற்போது அந்தக் கிணற்றில் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கர்நாடகா போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
