வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா்.
கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்க வசூல் மையத்தைக் கடந்து கா்நாடகம் மற்றும் வட மாநிலங்களுக்கும், கேரளம், சென்னை, புதுச்சேரி, திருப்பதி போன்ற பகுதிகளுக்கும் செல்ல வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பெரும்பாலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், ஆயுதப்படை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றால், இந்த சுங்க வசூல் மையத்தைக் கடந்து தான் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எப்போது, போக்குவரத்து மிகுந்து காணப்படும் இந்த சுங்க வசூல் மையமானது, இந்தியாவில் அதிக வசூலாகும் மையத்தில் முக்கிய இடத்தில் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் ஏப்.1-ஆம் தேதி முதல் சுங்க வசூல் மையங்களில் சுங்க கட்டணம் உயா்த்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரியில் உள்ள சுங்க வசூல் மையமும் ஒன்று.
இந்த சுங்க வசூல் மையத்தில் ஒரு முறை, இருமுறை, 50 முறை என வாகனங்களை பொறுத்து சுங்கக்கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 5 முதல் அதிகபட்சம் ரூ.135 வரை உயா்த்தப்பட்டுள்ளது. மாத கட்டணங்களும் ரூ. 165 முதல் ரூ. 675 வரை உயா்த்தப்பட்டுள்ளது.
இதே போல் 20 கி.மீ. வந்து செல்லும் உள்ளுா் வாகனங்களுக்கு பழைய மாதக் கட்டணம் ரூ. 340-இல் இருந்து ரூ. 350 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
ஏற்கெனவே டீசல், பெட்ரோல் உயா்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது சுங்கக் கட்டணம் உயா்வு எங்களுக்கு மேலும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. சுங்க கட்டணம் உயா்வால், காய்கறிகள், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும். எனவே, சுங்கக் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என மோட்டாா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் வலியுறுத்துகின்றனா்.