`இந்தியாவின் முதல் காபி சாகுபடி நடந்த இடம்' எங்கு தெரியுமா? - அப்படி என்ன ஸ்பெஷல்?
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவார்.
அந்த வகையில் இந்தியாவில் அதிகம் அறியப்படாத ஒரு சுற்றுலா தளத்தை பற்றி கூறியிருக்கிறார். அது இந்தியாவின் முதல் காபி சாகுபடி நடந்த இடம் என்று கூறப்படுகிறது. இந்த இடம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மாவட்டம் தான் சிக்கமகளூரு. இந்த பெயரின் அர்த்தம் 'இளையமகளின் நகரம்' என கூறப்படுகிறது. இந்த இடத்தை மன்னராக இருந்த ஒருவர் தனது இளைய மகளுக்கு பரிசாக வழங்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த இடத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்டால், அழகான மலைகள் தொடங்கி, வனவிலங்குகள், கவர்ச்சியான தாவரங்கள், வரலாற்று கோயில்கள் என அனைத்தும் இங்கிருக்கின்றன.
ஆனால் குறிப்பாக இந்த இடம் காபி தோட்டங்களுக்கு பிரபலமானதாக உள்ளது. இந்தியாவின் முதல் காபி தோட்டங்கள் இங்கு தான் பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ’இந்தியாவின் காபி நிலம்’ என்ற பட்டத்தை சிக்கமகளூரு பெற்றுள்ளது.
இந்த அழகிய நிலத்திற்கு வரும் எவரும் காபியை ருசிக்காமல் அவர்களின் பயணம் முழுமை அடையாது.
அசாம் இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களுக்கு எப்படி பிரபலமானதோ அதேபோன்று சிக்கமகளூரும் அதன் காபி தோட்டங்களுக்கு பிரபலமானது. இந்தியாவின் காபி உற்பத்தியில் சிக்கமகளூரு கிட்டத்தட்ட 70% முதல் 75% வரை பங்களிக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளை சுற்றியுள்ள இந்த அழகான காபி எஸ்டேட்டுகள், சுற்றுலா பயணிகளுக்கு ரிசார்ட், உணவகங்களை வழங்குகிறது.
பதினாறாம் நூற்றாண்டில் பாபு புதான் என்பவர் முதன் முதலில் இங்கு காபி செடியை பயிரிட்டார் என்ற சுவாரசிய தகவலும் உள்ளது. அவர் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்று திரும்பும் போது காபி கொட்டைகளை கொண்டு வந்து இங்கே பயிரிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர்தான் இந்த இடம் காபி நிலமாக மாறி இருக்கிறது.

காபி அருங்காட்சியம்
சிக்கமகளூரில் அமைந்துள்ள காபி அருங்காட்சியம் இந்திய காபி வாரியத்தால் நடத்தப்படுகிறது. இது காபி பிரியர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும். அதாவது இங்கு காபியை பற்றி ஆழமாக அறிந்து கொள்ள முடியுமாம். இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும், வார இறுதி நாள்களில் மூடப்பட்டிருக்கும்.
சிக்கமகளூர் காபிக்கு மட்டும் பிரபலமானது இல்லாமல் அதன் அழகிய நிலப்பரப்புக்கும் வனவிலங்குகளுக்கும் பிரபலமானதாக அறியப்படுகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
