MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
இந்தியர்களை ஒன்றிணைத்த ரயில்கள்; மகாத்மா காந்தியின் அனுபவம் என்ன? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, தமிழில் ஒரு முக்கியமான பயணப் புத்தகம். அதில், 'பயணம் என்பது வீட்டின் வாசலிலிருந்து தொடங்குகிறது...' என்ற ஒரு வரி வரும்.
'வீட்டின் வாசல்' என அவர் குறிப்பிடுவது, ரயில் தண்டவாளத்தைத் தானோ என்ற ஐயம் உருவாகிறது. அந்த அளவிற்குச் சுவாரஸ்யமான பல ரயில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் எஸ்.ரா.
ரயிலேறிய கிராமம் புத்தகத்தில், உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டு அவர் எழுதிய கட்டுரையைப் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.

வங்காளத்தைச் சேர்ந்த ஶ்ரீமதி சென் என்ற ஒற்றைப் பெண்ணின் ஆசை, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
தனது கிராம மக்கள், இருப்பிடத்தை விட்டு வெளியே சென்றதே இல்லை. அருகில் இருக்கும் நகரம் எப்படி இருக்கும்? யார் இவர்களை ஆள்வது? மற்ற மாநில மக்களின் கலாசாரம் என்ன? அவர்களின் மொழி என்ன? எப்படிப் பழகுவார்கள் போன்ற எந்த விவரமும் தெரியாதவர்கள்.
இப்படிப்பட்டவர்களை ரயிலின் மூலம் இந்தியப் பயணம் மேற்கொள்ளச் செய்து, அவர்களுக்குள் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார் ஶ்ரீமதி சென்!
இந்திய மக்களுக்கும் ரயில்களுக்கும் உள்ள உறவு, இந்திய வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. அதில் மனதைப் பிழியும் கதைகள் பற்பல.
தங்கள் ஊர் பருத்தி சந்தையின் வருவாயை மேம்படுத்த, பிரிட்டிஷ் அரசின் சுயநலம் பொருந்திய முடிவே இந்திய ரயிலின் கண்டுபிடிப்புக்குக் காரணம். அதற்குக் கைமாறாக உழைப்பின் வழியாகவும் உயிரின் வழியாகவும் மிகப்பெரிய விலையை நம் மக்கள் அளித்திருக்கிறார்கள்.
1853 ஆம் ஆண்டு. ஏப்ரல் 16. பிற்பகல் 3:30 மணி.

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில் நிலையத்திலிருந்து தானேவுக்கு ஆசியாவின் முதல் ரயில் விடப்பட்டது.
32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது. பாம்பே கவர்னரின் மனைவியான லேடி பால்க்லாண்ட் உட்படப் பல செல்வந்தர்கள் அதில் பயணம் செய்தனர்.
அதுவரை ரயிலை நேரில் காணாத நம் மக்கள், ரயில் பெட்டியைப் பார்த்தவுடன் வாயைப் பிளந்தனர். ரயில் கிளம்பியதும் அதன்பின் உற்சாகமாக ஓடினர்.
ரயில் விட்ட கதையையும், அதன் பின்னால் உள்ள அரசியலையும் விரிவாக எழுதிய வரலாற்று ஆசிரியர்கள், அதன் பின்னால் ஆச்சரியத்தோடு ஓடிய நம் மக்களைப் பற்றி எழுதவேயில்லை!
மாறாக, ரயில் புகையைப் பார்த்ததும், 'இது ஒரு தீய சக்தி...' என்று புலம்பிய அப்பாவி இந்தியர்களை நினைத்து வருத்தம் அடைந்தனர்.
வரலாற்றில் ரயில் ஓடிய தடங்களிலெல்லாம் நம் முன்னோர்களின் ரத்தமும் ஓய்வில்லாமல் ஓடியிருக்கிறது.
இந்தியப் பிரிவினையின்போது, அம்ரிஸ்தார் ரயில் நிலைய கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரம். 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரைக் காவு வாங்கியது.
இரண்டிற்கும் பொதுவாக இருந்தது ரயிலும் மதமும்.
ஆனால்... இதையெல்லாம் தாண்டிய ஒரு சக்தி ரயிலையும் மக்களையும் ஒன்றிணைத்தது.
அது, மகாத்மா காந்தி.

காந்திக்கும் ரயிலுக்கும் இருந்த நெருக்கங்கள் அதிகம். காந்தி தனது வாழ்நாளில் நடைப்பயணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ அதையேதான் ரயில் பயணத்திற்கும் கொடுத்திருக்கிறார்.
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்த காந்தியின் கால்கள், பெரும்பாலும் ரயில் நிலையத்திலிருந்து தான் முதல் அடியை எடுத்து வைத்திருக்கின்றன.
காந்தியின் ஒவ்வொரு ரயில் பயணமும் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.
ஏழை எளிய மக்களோடு காந்திக்கு இருந்த நெருக்கமான உறவை, ரயில் பயணம்தான் சாத்தியமாக்கியிருக்கிறது.
காந்தி, மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வதுதான் வழக்கம். அப்போதுதான் எளிய மக்களின் அவஸ்தையைp புரிந்துகொள்ள முடியும் என்பார்.
தன்னுடைய சுயசரிதையில் மூன்றாம் வகுப்பு ரயில் பயண அனுபவத்தை விரிவாக எழுதியிருக்கிறார் காந்தி.
அதில், 'பயணியருக்குth தேநீர் என்ற பெயரில் கழனித் தண்ணீர்தான் கிடைத்தது. தூசும் தும்புமாய் சர்க்கரை. பால் என்னும் பெயரில் வெள்ளை நிற திரவம். ஒரு முறைகூட கழிவறை சுத்தப்படுத்தப்படவில்லை. கழிவறைத் தொட்டியில் தண்ணீரும் இல்லை.
விற்பனைக்கிருந்த உணவுப் பொருட்களெல்லாம் அழுக்கு. மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யும் மக்களைப் பற்றி இங்கு யாருக்குமே கவலை இல்லை" என்கிறார்.
காந்தியின் இந்தப் பதிவை எளிதில் கடந்துவிட முடியாது. இந்திய மக்களின் ஒட்டுமொத்தக் குரலாக அது ஒலித்திருக்கிறது.
ஏ.கே.செட்டியாரின் பயணக்குறிப்புகள் பிரபலமானவை. அவர் இந்திய ரயில்களை மற்ற நாட்டு ரயில்களோடு ஒப்பிட்டு, தனது அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
'இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் தங்களுடைய நாட்டின் புகழ்பெற்ற இடங்களைப் புகைப்படங்களாக ரயிலினுள் ஆங்காங்கே மாட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவிலோ இங்கே எச்சில் துப்பாதீர், திருடர்கள் ஜாக்கிரதை போன்ற படங்களையே பார்க்கமுடியும்...'

காந்தியும் ஏ.கே.செட்டியாரும் இப்படி எழுதி அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது.
ஆனால் இன்றும் அதே நிலையில் தான் பெரும்பாலான இந்திய ரயில்கள் உள்ளன என்பது கசப்பான உண்மை. ஆனாலும், இன்று ரயில்தான் இந்திய ஏழைகளின் பயணத் தோழன்.
ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட ஏழு பில்லியன் இந்தியர்கள், ரயிலில் பயணிக்கின்றனர். ரயில்கள் இல்லாத ஓர் வாழ்க்கையை எந்த ஒரு இந்தியனாலும் கற்பனை செய்துவிட முடியாது.
முடிவாக, வரலாறு எனும் ரயில் தடத்தில் உள்ள சறுக்கல்களை நீக்கினால்...
'பயணம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தருவதாக ரயில் பயணங்களே இருக்கின்றன'.
- சரத்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs