வீட்டில் ஸ்டூடியோ; மாடல்களுக்கு லட்சத்தில் சம்பளம்; ஆபாச வீடியோ நெட்வொர்க்கை இயக்கிய நொய்டா தம்பதி!
உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரது வீட்டில் ரெய்டு நடத்தினர். இதில் உஜ்வாலும், அவரது மனைவி நீலுவும் சேர்ந்து சைப்ரஸ் நாட்டை சேர்ந்த டெக்னிஸ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து ஆபாச வீடியோ இணைய தளங்களை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதற்காக சட்டவிரோதமாக 15.66 கோடி வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆபாச வீடியோ மற்றும் ஆன்லைன் வீடியோ மூலம் கிடைக்கும் நிதியை சட்டவிரோதமாக இத்தம்பதி வெளிநாட்டிற்கு அனுப்பி வந்துள்ளனர். அவர்கள் விளம்பரம் மற்றும் மார்க்கெட் ஆராய்ச்சிக்கான கட்டணம் என்று தவறான தகவல் கொடுத்து இது போன்று பணத்தை அனுப்பி வந்தனர்.

உஜ்வால் இதற்கு முன்பு ரஷ்யாவில் இதே தொழிலை செய்து வந்தார். அதன் பிறகு இந்தியாவிற்கு வந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியுடன் சேர்ந்து இத்தொழிலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கணவன் மனைவி இருவரும் தங்களுக்கு தேவையான மாடல் அழகிகளை பேஸ்புக் மூலம் தேர்வு செய்து வந்துள்ளனர். இதற்காக பிரத்யேகமாக 'echato dot com' என்ற பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் மாடலிங் வாய்ப்பு கொடுப்பதாக கூறி விளம்பரம் செய்து பெண்களை தங்களது வலையில் விழ வைக்கின்றனர். மாடலிங் வாய்ப்பு தேடி வரும் பெண்களிடம் வீட்டிற்கு ஒத்திகைக்கு வரும்படி கூறுவது வழக்கம்.
தம்பதி வீட்டில் இருந்தபடி ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பு செய்வதற்கு வசதியாக வீட்டிலேயே பிரத்யேக ஸ்டூடியோ வைத்திருந்தனர். அதில் 24 மணி நேரமும் 3 பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மாடலிங் ஒத்திகைக்கு வரும் பெண்களிடம் ஆன்லைன் ஆபாச வீடியோவில் நடித்தால் மாதம் 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி அவர்களை தங்களது வலையில் விழவைத்துவிடுகின்றனர்.
தங்களது வலையில் விழும் பெண்களிடம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க இலக்கு நிர்ணயிக்கப்படும். பல வகையில் இப்பெண்கள் ஆன்லைனில் தங்களது உடலை வாடிக்கையாளர்களிடம் காட்டி பணம் சம்பாதிக்கின்றனர். பாதி முகத்தை மூடியபடி, முழு முகத்தை காட்டுதல், முழு நிர்வாணமாக காட்டுதல் என பல பிரிவுகளில் அப்பெண்களுக்கு வேலை கொடுக்கப்படும். இந்த வீடியோக்களை ஆன்லைனில் பார்க்க வாடிக்கையாளர்களிடம் பணம் கட்டி டோக்கன் வாங்கும்படி கூறுகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தில் 75 சதவீதத்தை தம்பதிகள் வைத்துக்கொண்டு 25 சதவீத தொகையை மாடல் அழகிகளுக்கு கொடுத்து வந்திருக்கின்றனர்.

ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களிடம் கிரிப்டோகரன்ஸி மூலம் இத்தம்பதி பணம் வாங்கிக்கொண்டிருந்தனர். நெதர்லாந்தில் உள்ள ஒரு வங்கிக்கணக்கிற்கு ரூ.7 கோடியை டெக்னிஸ் நிறுவனம் டிரான்ஸ்பர் செய்திருந்தது. அந்த நிதியை இத்தம்பதி இந்தியாவில் சர்வதேச டெபிட் கார்டு மூலம் எடுத்திருப்பதையும் அமலாக்கப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. ஆயிரக்கணக்கான பெண்களை இத்தம்பதி ஆபாச வீடியோவில் நடிக்க தேர்வு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தம்பதியிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு முன்பு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கொரோனா காலத்தில் இது போன்று வளர்ந்து வரும் நடிகைகள் மற்றும் வேலை கிடைக்காத நடிகைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோ தயாரித்து ஆன்லைனில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்ததாக கைது செய்யப்பட்டார்.