எம்புரான் படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
மோகன் லால் நடிப்பில் வெளியான எம்புரான் படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி வழக்கு தொடர்ந்துள்ளார்.
எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜின் கூட்டணி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனால், வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படும் என்று மோகன்லால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எம்புரான் படத்துக்கு உடனடியாக தடை விதிக்கக் கோரி கேரள பாஜக நிர்வாகி விவி விஜேஷ் என்பவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “எம்புரான் படத்தில் 2002 கோத்ரா கலவரத்தைக் குறிப்பிடும் காட்சிகள் இருக்கிறது. பாதுகாப்பு அமைச்சகத்தைப் பற்றி தேவையற்ற கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் காட்சிகளை சித்தரித்துள்ளனர்.
இந்தப் படம் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டக்கூடும். வகுப்புவாத கலவரத்தையும் தவிர்க்க படத்தின் காட்சிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்னும் பட்டியலிடப்படவில்லை.
சர்ச்சைகளுக்கு மத்தியில் ரூ. 200 கோடியைக் கடந்து எம்புரான் திரைப்படம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.