CWC : விரைவில் `குக்கு வித் கோமாளி சீசன் 6' - புது கோமாளி அவதாரம் எடுக்கும் பிக் பாஸ் பிரபலம்?
`குக்கு வித் கோமாளி' இளைஞர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களுள் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. புதிய புரொடக்ஷன் நிறுவனம் கையிலெடுத்த `குக்கு வித் கோமாளி சீசன் 5' நிறைவடைந்ததையடுத்து தற்போது அடுத்த சீசன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

`குக்கு வித் கோமாளி’ சீசன் 6
`பிக்பாஸ் சீசன் 8'-ல் ரன்னர் அப் பட்டத்தைத் தட்டிச் சென்றவர் செளந்தர்யா. பிக்பாஸ் வீட்டில் இவர் வைத்திருந்த புளிக்குழம்பு அப்போது வைரலாக பேசப்பட்டது பிக்பாஸ் ரசிகர்களுக்கு நினைவில் இருக்கலாம். செளந்தர்யாவிற்கென சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர் பட்டாளமும் அதிகம். இந்நிலையில் கோமாளியாக செளந்தர்யாவும் களம் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமர், புகழ், சரத் உடன் இணைந்து செளந்தர்யாவும் கோமாளியாக வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செளந்தர்யாவிற்கும், சுனிதாவிற்கும் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் சில முரண்பாடுகள் இருந்த நிலையில் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்பார்களா என்கிற கேள்வியையும் அவர்களுடைய ரசிகர்கள் எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.

விரைவிலேயே இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த சீசனையும் ரக்ஷன் தான் தொகுத்து வழங்க இருக்கிறாராம். அதிகாரப்பூர்வ ப்ரொமோ வெளியாகும் முன்னரே அது சார்ந்த புகைப்படங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக `குக்கு வித் கோமாளி' ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.