`அது என் பர்சனல்' - ரெட் கார்டு சர்ச்சை; சீரியல் விலகல் குறித்து ரவீனா
விஜய் டிவியின் 'சிந்து பைரவி' சீரியலில் கமிட் ஆகிவிட்டு, பிறகு விலகிய 'பிக் பாஸ்' ரவீனா தாஹா சின்னத்திரையில் வேறு சீரியல்களிலோ அல்லது ரியாலிட்டி ஷோக்களிலோ வருவதற்கு ரெட் கார்டு போடப்பட்டிருக்கிறது' என்கிற தகவல் கடந்த இரு தினங்களாக டிவி ஏரியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரித்தோம். சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய 'சிந்து பைரவி' தொடர் இரண்டு தோழிகளின் கதை. ஒரு தோழியாக ரவீனா தாகா கமிட் ஆகியிருந்தார். விஜய் டிவியில் சில சீரியல்கள் மற்றும் 'குக்கு வித் கோமாளி' 'பிக் பாஸ்' ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் ரொம்பவே பாப்புலர் ஆகியிருந்த ரவீனா 'பிக் பாஸ்'க்குப் பிறகு விஜய் டிவியில் நடிக்கும் தொடராக புரோமோவெல்லாம் வெளியானது.இந்நிலையில் திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை, ஒளிபரப்பு தொடங்குவதற்கு சில நாட்கள் முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தா ரவீனா.

'லீட் ரோல் என்றுதான் முதலில் பேசப்பட்டதாகவும் ஆனால் கமிட் ஆன பிறகு இரண்டு ஹீரோயின்களின் கதை எனத் தெரிய வந்ததாலேயே ரவீனா வெளியேறினார்' என்றும் அப்போது பேசப்பட்டது. ஆனால் ரவீனா தரப்பில் எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை.
தொடரிலிருந்து திடீரென அவர் விலகியதால், தொடர் தயாரிப்பாளர்கள் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது அப்போதே புகார் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. அதாவது தொடரில் கமிட் ஆகிவிட்டுப் பிறகு வெளியேறியதால் வருங்காலத்தில் எந்தவொரு டிவி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க முடியாத படி ரெட் கார்டு தரப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை வைத்தார்களாம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரவீனா எந்தவொரு டிவி நிகழ்ச்சியிலும் தலைகாட்டாததால் இந்த விவகாரமும் அப்படியே சைலன்ட்டாக இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன் ஜீ தமிழ் சேனலில் தொடங்கிய 'டான்ஸ் ஜோடி டான்ஸ்; நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக ரவீனா கலந்துகொள்ள, மீண்டும் 'ரெட்' கார்டு விவகாரம் எழுப்பப் பட்டிருக்கிறது.
தற்போது 'எப்படி அவர் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்' என்கிற கேள்வியை எழுப்பியே பழைய புகாரைத் தூசுதட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக ரவீனாவிடமே கேட்கலாமென அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.''என் மீது புகார் கொடுக்கப்பட்டது நிஜம்தான். ஆனா ரெட் கார்டெல்லாம் எனக்கு வழங்கப்படல. அதோட, இப்ப இந்த விவகாரம் சுமுகமாக முடிஞ்சிடுச்சு. அதனால இனி டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நான் தொடர்வதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை' என்றார். 'சிந்து பைரவி' சீரியலில் இருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து கேட்டதற்கு, அது என்னுடைய பர்சனல், வெளியில வேண்டாமே' என மறுத்து விட்டார்