நெல்லை: 3 மாதங்களில் 41 பேருக்கு ஆயுள் தண்டனை; வழக்குகளை முடிப்பதில் தீவிரம் காட்டும் போலீஸார்
தென் மாவட்டங்களில் பதற்றமான ஊர்கள் நிறைந்தது நெல்லை மாவட்டம். ஆனால், போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, குற்றவாளிகளை கைது செய்தல், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருதலில் போலீஸார் ஒருங்கிணைந்து திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.
தாழையூத்து முன்னாள் பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணியை கொலை செய்ய முயன்ற பிரபல ரெளடி ஜேக்கப் உள்பட 6 பேருக்கு கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சிலம்பரசனின் அறிவுறுத்தலின் பேரில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தாழையூத்து, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய 5 காவல் உட்கோட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வீரவநல்லூரில் பழிக்குப்பழியாக வீடு புகுந்து இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி, வழக்கறிஞர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

முக்கூடல் அருகில் தோட்ட உரிமையாளரை கொலை செய்த அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதே மாதம் 24-ம் தேதி 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை வழங்கி நெல்லை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வீரவநல்லூர் அருகில் கடந்த 2008-ல் பெண் உள்பட 5 பேரை கொலை செய்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் நடந்த சாதியக் கொலைகள், பழிக்குப்பழியான கொலைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை அருகே பாளையஞ் செட்டிகுளத்தில் ஒரே சமுதாயத்தினரிடையே நடந்த கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
கோபால சமுத்திரம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கினை துரிதப்படுத்தி 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட போலீஸாரின் துரித நடவடிக்கையால் கடந்த 2025-ல் ஜனவரி முதல் மார்ச் 31-ம் தேதி வரை இதுவரை நடந்த 12 கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஒருவருக்கு மரண தண்டனையும், 14 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 41 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். குற்றங்களை குறைக்கவும், குற்றங்கள் நடைபெறாத மாவட்டமாக நெல்லையை மாற்ற போலீஸாரின் ஒருங்கிணைப்புகளுடன் துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
