குற்றாலம் போல குளித்து கொண்டாட மதுரையில் சூப்பர் ஸ்பாட்..! சோழவந்தானில் இப்படி ஓர் அருவியா?
பொதுவாக நீர்வீழ்ச்சி என்றவுடன் குற்றாலம் தான் நினைவிற்கு வரும். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் செல்ல வேண்டும் என்றல்ல, மதுரைக்கு அருகேயும் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது! மதுரைக்கு அருகிலுள்ள சோழவந்தான் கிராமத்தில் தான் இந்த குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
எழில் கொஞ்சும் அழகை பிரதிபலிக்கும் இந்த அருவி மதுரையின் ஒரு சுற்றுலாத் தலமாகவே மாறி வருகிறது.
மக்கள் பலரும் கூட்டம் குறைவாக இருக்கும் இடத்திற்கு பயணம் செல்ல விரும்புவார்கள். அப்படி ஒரு இடமாக நிச்சயம் குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி இருக்கும்.

காட்டுக்கு நடுவே அருவியின் தண்ணீர் சத்தம் மட்டும் ஒலிக்க அப்படியே இயற்கையின் அமைதியில் மூழ்கிவிடுவீர்கள். அந்த இயற்கை அழகை ரசித்துவிட்டு அருவியின் ஓரத்தில் அமர்ந்து, சூழலை அப்படியே அனுபவிக்கலாம்.
அதுமட்டுமில்லாமல் மலையேற்றம் செய்ய விரும்புவர்களுக்கும் இந்த இடம் சிறந்த இடமாகும். மலையேறுபவர் இந்த அருவிக்கு 2 கி.மீ மலையேற்றம் செய்ய வேண்டும்.
சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். இதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர்.
அங்கு அருவி மட்டும் தான் உள்ளதா? என்றால் இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் 500 ஆண்டுகள் பழமையான கோயிலும் உள்ளது. அங்கு நீங்கள் செல்லலாம். மதுரை நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள இந்த இடத்தை நீங்கள் நிச்சயம் பார்வையிடலாம். மதுரைவாசிகள் தங்கள் வார இறுதி நாள்களை நீர்வீழ்ச்சியில் கழிப்பார்கள்.
மதுரையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாகப் பேருந்து மூலம் செல்லலாம். சுற்றுலாப் பயணிகள் வாடிப்பட்டி வழியாகவும் வரலாம்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
