கண்ணி வெடிகளால் சூழப்பட்ட ஜார்க்கண்ட் காடுகள்!
ஜார்க்கண்ட் காடுகளில் மாவோயிஸ்டுகள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அவர்கள் வைத்த கண்ணி வெடிகள் பாதுகாப்புப் படையினருக்கு சவாலை ஏற்படுத்துகின்றன.
பாதுகாப்புப் படையினர் காடுகளுக்குள் வந்து தங்களைக் கைது செய்வதை தடுக்கும் விதமாக மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் காடுகளில் ஆங்காங்கே கண்ணி வெடிகளைப் புதைத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு ஜார்க்கண்ட் காடுகளில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் தற்போது பாதுகாப்புப் படையினரின் மாவோயிஸ்ட்கள் தடுப்பு நடவடிக்கைக்கு சவாலை ஏற்படுத்தும் விதமாக உள்ளன.
கண்ணி வெடிகளால் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் முதல் பாதுகாப்புப் படையினர் 6 பேர் பலியாகி 20 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அதேபோல, சாய்பாசா பகுதியைச் சுற்றியுள்ள மக்களில் 22 பேர் பலியாகி, பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு மார்ச் மாதத்தில் மட்டும் சாரந்தா காடுகளில் நடைபெற்ற கண்ணி வெடி தாக்குதலில் மார்ச் 5 அன்று 3 ராணுவ வீரர்களும், மார்ச் 16 அன்று ஒருவரும் காயமடைந்தனர். மார்ச் 22 அன்று நடைபெற்ற கண்ணி வெடி தாக்குதலில் சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் ஒருவர் பலியானார். அவருடன் சென்ற தலைமை கான்ஸ்டபிள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் பெரும்பாலும் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது சாரந்தா காடுகளில் மட்டுமே அவர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 85 - 90 பேர் வரை அங்கு பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால், காடுகளுக்குள் ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளை அவர்கள் புதைத்து வைத்திருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, 2022 நவம்பர் முதல் ஆண்டுக்கு சராசரியாக 50 கிலோ வரை அதிகபட்ச எடையுள்ள 300 கண்ணி வெடிகள் கைப்பற்றப்படுகின்றன.
மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் 2023 ஆகஸ்ட் மாதம் மட்டும் 500 கிலோ வெடிமருந்துகளும், 65 கண்ணி வெடிகளும் கைப்பற்றப்பட்டன.
”கண்ணி வெடிகள் தயாரிப்பதற்கான பொருள்கள் சந்தைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. தேர்ந்த நிபுணரால் சில மணி நேரத்தில் ஒரு கண்ணி வெடியை தயாரிக்க முடியும். எனவே, காடுகளின் மறைவான இடங்களில் உள்ள மாவோயிஸ்டுகளைத் தேடும் நடவடிக்கையில் இவை ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளன.
படைகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காடுகள் முழுவது கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலையிலும் பாதுகாப்புப் படையினர் முழு உறுதியுடன் மெதுவாக முன்னேறி வருகின்றனர்” என சாய்பாசா பகுதி துணை ஆய்வாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்தார்.
காட்டுப் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்ற எச்சரிக்கை வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை காடுகளை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் விநியோகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.