கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!
ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாசா நகரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் 21 சிறார் கைதிகள் வாயிற்கதவை உடைத்து தப்பியோடினர்.
இதுபற்றிய தகவல் கிடைத்தவுடன் துணை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட பல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தப்பியோடிய கைதிகளில் 4 பேர் மட்டும் சிறிது நேரத்தில் கூர்நோக்கு இல்லத்துக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
சிறார் கைதிகள் மாலை நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அங்கு பணியிலிருந்த காவலரைத் தாக்கிவிட்டு கூர்நோக்கு இல்ல வளாகத்தை அவர்கள் நாசப்படுத்தினர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த அவர்கள் வாயில் கதவை உடைத்து தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் குல்தீப் சௌத்ரி, ”கூர்நோக்கு இல்லத்தில் இருந்த 85 கைதிகளில் 21 பேர் தப்பியோடினர். இந்தச் சம்பவம் இங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் அலட்சியமாக செயல்பட்டிருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.