Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்...
புதிய ஊழலில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர்?
இஸ்ரேல் பிரதமரின் நெருங்கிய கூட்டாளிகள் புதிய ஊழலில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளிகள் 2 பேர் கத்தார் நாட்டைப் பற்றி நேர்மறையாக இஸ்ரேலில் விளம்பரப்படுத்த பணம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலை நீண்ட காலமாக ஆட்சி செய்து வரும் பிரதமர் நெதன்யாகு பல்வேறு சர்ச்சைகள் மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் மீண்டும் புதிய வழக்கில் சிக்கவுள்ளாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், கடந்த சில ஆண்டுகளாக அரசின் நிறுவனங்களை அவர் குறைத்து மதிப்பிட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்த வழக்கில் பிரதமர் நெதன்யாகு மீது நேரடியாக குற்றம்சாட்டப்படவில்லை என்றாலும் ஏற்கனவே அவர் மீதான ஊழல் வழக்கு நீண்ட காலமாக நிலுவையிலுள்ள சூழலில் கத்தாருடனான அவரது அரசின் தொடர்புகளைப் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு ஊடகங்களினால் ‘கத்தார்கேட்’ என்று அழைக்கப்படும் இந்த வழக்கில் நெதன்யாகுவின் நீண்டநாள் ஊடக ஆலோசகரான ஜோனாதன் உல்ரிச் மற்றும் முன்னாள் செய்தித் தொடர்பாளர் எளி ஃபெல்டுஸ்டெயின் ஆகியோருக்கு கத்தார் நாட்டைப் பற்றி பொது பிரச்சாரம் மேற்கொள்ள அமெரிக்கவைச் சேர்ந்த ஒருவர் மூலமாக பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனால், அவர்கள் இருவரும் வெளிநாட்டு தரகருடன் தொடர்பிலிருந்தது, பணமோசடி, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தண்டனைப் பெறக்கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வரும் சூழலில் அவர்களது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் படைக்காக கத்தார் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இஸ்ரேலுடன் முறையான ராஜத்தந்திர உறவுகள் இல்லாத கத்தார் நாட்டை இஸ்ரேலியர்கள் ஹமாஸ் படைகளின் ஆதரவாளராக மட்டுமே கருதி வருகின்றனர். இதனால், இஸ்ரேல் மக்களிடையே அந்த நாட்டைப் பற்றி நல்ல கருத்துக்களை உண்டாக்க பணம் பெறப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இஸ்ரேல் காவல் துறையிடம் தனது வாக்குமூலத்தை அளித்துள்ள பிரதமர் நெதன்யாகு இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது எனவும் தனது ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொள்ளப்படும் முயற்சி எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: கிரீஸ் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து!