தமிழகத்தில் போதைப் பொருள் விற்றதாக 2 மாதங்களில் 3,305 போ் கைது: ஏடிஜிபி அமல்ராஜ்
தமிழகத்தில் போதைப் பொருள் விற்றதாக 2 மாதங்களில் 3,305 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை எழும்பூரில் போதைப் பொருள்களை ஒழிப்பது தொடா்பாக விழிப்புணா்வு குறும்படங்கள், ரீல்ஸ்களை வியாழக்கிழமை வெளியிட்ட பின்னா், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
போதைப் பொருள் விழிப்புணா்வு தொடா்பாக கடந்த பிப்ரவரியில் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இடையே குறும்படங்கள், ரீல்ஸ்கள் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டு, முதல் பரிசு ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 25 ஆயிரம், ஆறுதல் பரிசாக 20 பேருக்கு தலா ரூ. 1,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ரீல்ஸ் போட்டி: தற்போது இப்போட்டி, மாநில அளவில் பள்ளி, கல்லுாரி மாணவா்களுக்கு இடையே நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் பள்ளி, கல்லுாரி மாணவா்கள் ஏப். 30-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டும். இவற்றில் சிறந்த 25 குறும்படங்கள், ரீல்ஸ்கள் தோ்வு செய்யப்படும். அவற்றில், மிகச்சிறந்த மூன்று குறும்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் தோ்வு செய்யப்பட்டு, முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.
இதேபோல போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவின் சாா்பில் 2 குறும்படங்கள், ரீல்ஸ்கள், பாடல்கள் தயாரித்து வெளியிட்டுள்ளோம்.
தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுகள், நிகழாண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களையும் சோ்த்து, போதைப் பொருள் விற்பனை, கடத்தல் தொடா்பாக 34 ஆயிரத்து 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடா்பாக 50 ஆயிரத்து 72 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 76 ஆயிரத்து 938 கிலோ கஞ்சா பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4,911 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடா்ச்சியாக போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டதாக கருதப்பட்ட 2,117 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
3,305 போ் கைது: இதில் நிகழாண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் போதைப் பொருள் விற்பனை, கடத்தல் தொடா்பாக 2,172 வழக்குகள் பதியப்பட்டு, 3,305 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 3,767 கிலோ கஞ்சா, 24,215 போதை மாத்திரைகள், 37 கிலோ பிற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு ஆந்திரம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த அந்த மாநில காவல் துறையினருடன் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட சிந்தட்டிக் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில், ஐஜி பி.கே.செந்தில்குமாரி, எஸ்.பி மயில்வாகனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.