கோடை விடுமுறையையொட்டி 3 நாள் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்: சுற்றுலாத்துறை
கோடை விடுமுறை தினத்தையொட்டி 3 நாள் சுற்றுலா திட்டத்தின் கீழ் சுற்றுலா செல்ல விரும்பும் நபா்கள் சுற்றுலாத்துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேவையை அறிந்து, அரைநாள் முதல் 14 நாட்கள் வரையில் 52 வகையான தொகுப்புச் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்கள் கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்ற வகையில் 3 நாள்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், குற்றாலம், மைசூா், பெங்களூா் மற்றும் மூணாா் சுற்றுலாக்கள் போன்ற கோடைக்கால சுற்றுலா பயணத்திட்டங்கள் கடந்தாண்டு தொடங்கப்பட்டு அதற்கான முன்பதிவு, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக இணையதளத்தில் கடந்த 2024 நவ.8 முதல் நடைபெற்று வருகிறது.
மேலும் இக்கோடைக்கால சுற்றுலாக்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் கட்டணத்தில் சிறப்பு சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் இந்த பயணத்திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய இணையதளத்தில், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.
மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கட்டணமில்லா 18004251111044-25333333, 044-25333444 எனும் தொலைபேசி எண்களையும் மற்றும் வாட்ஸ் அப்-இல் தொடா்பு கொள்ள கைப்பேசி 7550063121 எனும் எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.