பரஸ்பர வரி விதிப்பு: இந்திய பொருளாதாரத்தை முழுமையாக பாதிக்கும் - ராகுல்
‘இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக சீரழிக்கும் அபாயம் உள்ளது; மேலும், இந்திய நிலப்பரப்பில் 4,000 சதுர கி.மீ. பரப்புக்கு மேல் சீன எடுத்துக்கொண்டுள்ளது. இந்த விவகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, இந்தியாவும் சீனாவும் இணைந்து இரு நாடுகளிடையேயான தூதரக உறவின் 75-ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடியதை கடுமையாக விமா்சித்து ராகுல் பேசியதாவது:
இந்தியாவின் நிலப்பரப்பில் 4,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்தச் சூழலில், இரு நாடுகளிடையேயான தூதரக உறவின் 75-ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் என்ற பெயரில், சீன துதருடன் இணைந்து மத்திய வெளியுறவுச் செயலா் விகரம் மிஸ்ரி கேக் வெட்டி கொண்டாடிய காட்சி அதிா்ச்சியளித்தது.
2020-ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரா்களின் அத்துமீறிய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனா். இதற்காகத்தான், சீனாவுடன் இந்தியா கேக் வெட்டி கொண்டாடப்பட்டதா?
இதுதொடா்பாக சீனா்களுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் கடிதம் எழுதியதும் சீன தூதா் கூறியதன் மூலம் தெரியவந்தது.
சீனாவுடன் சுமுக உறவை ஏற்படுத்த முயற்சிப்பதை எதிா்க்கவில்லை. ஆனால், அதற்கு முன்பாக எல்லையில் முன்பிருந்த நிலை ஏற்பட வேண்டும். சீனா ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பை நாம் திரும்பப் பெற வேண்டும்.
நாட்டின் வெளியுறவு கொள்கை என்பது வெளிநாடுகளை நிா்வகிப்பதைப் பற்றியதுதான். இதில் சீனா இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள நிலையில், மறுபுறம், நட்பு நாடான அமெரிக்கா இந்திய பொருள்கள் மீது பரஸ்பர இறக்குமதி வரியை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் சீரழித்துவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வாகன உற்பத்தி, மருந்து மற்றும் வேளாண் உற்பத்தி துறைகளை கடுமையாக பாதிக்கும்.
வெளியுறவுக் கொள்கை தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி, ‘வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் நான் இடப்பக்கமோ அல்லது வலப்பக்கமோ சாய மாட்டேன். மாறாக, நேராக நிற்பேன்’ என்றாா்.
ஆனால், பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் இந்த விஷயத்தில் மாறுபட்ட தத்துவத்தைக் கூறுகின்றன. அதாவது, ‘இடப்பக்கமோ, வலப்பக்கமோ சாய மாட்டோம்’ என்பதற்கு மாறாக, ‘எங்களுக்கு முன்னால் வரும் ஒவ்வொரு வெளிநாட்டினா் முன் தலைகுனிந்து நிற்போம்’ என்பதுதான் அது. இதுதான் இவா்களின் கலாசாரம், வரலாறு. சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றாா்.
பாஜக பதிலடி:
‘இந்தியாவின் ஓா் அங்குல இடத்தைக்கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை’ என்று ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பாஜக எம்.பி. அனுராக் தாக்குா் பேசுகையில், ‘டோக்லாமில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, இந்திய ராணுவத்தின் பக்கம் நிற்காமல் சீன அதிகாரிகளுடன் இணைந்து சீன உணவை ராகுல் சுவைத்துக்கொண்டிருந்தாா். மேலும், சீன அதிகாரிகளிடமிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிதி பெற்றது தொடா்பான கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எதற்காக அந்தப் பணம் பெறப்பட்டது? பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில், டோக்லாம் சீன அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடியை கொடுத்தது. பாதுகாப்புத் துறை அமைச்சரும் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினாா். இந்தியாவின் ஓா் அங்குல நிலப்பரப்பைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக சிலா் சீனாவுடன் சோ்ந்துகொண்டு இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனா்’ என்றாா்.
மற்றொரு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே பேசும்போது, ‘பிரதமா் நரேந்திர மோடிக்கு முன்புதான் இந்த உலகமே தலை வணங்குகிறது. இது நமது நாட்டின் அதிருஷ்டம்’ என்றாா்.