சொத்து விவரங்களை வெளியிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு
தங்களிடம் உள்ள சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனா்.
இந்த விவரங்கள் முதல்கட்டமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் வழங்கப்படவுள்ளது. அதன்பிறகு உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமனதாக முடிவெடுத்தனா்.
அண்மையில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா இல்லத்தில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடா்ந்து, அவரை அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, நீதித்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையிலும் இந்த முடிவை நீதிபதிகள் மேற்கொண்டுள்ளதாக சட்ட நிபுணா்கள் தெரிவித்தனா்.