விவாதத்துக்கு ஆப்சென்ட், வாக்கெடுப்புக்கு பிரசன்ட்! ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தை புறக்கணித்துவிட்டு, நள்ளிரவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மட்டும் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்பதை விடுங்கள், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதியில்லாதவர் ராகுல் காந்தி என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மசோதா நிறைவேற்றம்
நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்யப்பட்ட திருத்தங்களுடன் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதத்துக்கு 8 மணிநேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 12 மணிநேரத்தைக் கடந்து மக்களவையில் விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆதரித்து பேசினர்.
நள்ளிரவு 2 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும் எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
விமர்சனத்துக்குள்ளான ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி விவாதத்தில் பங்கேற்று பேசாததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நாடாளுமன்ற வளாகத்துக்கு புதன்கிழமை காலை வருகைதந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், மக்களவையில் மசோதா தாக்கல் செய்வதற்கு முன்னதாக புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
மசோதா மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் சார்பில் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய் பேசினார்.
இந்த நிலையில், விவாதம் முடியும் வரை மக்களவைக்கு வராத ராகுல் காந்தி, வாக்கெடுப்புக்கு முன்னதாக அவைக்கு வருகைதந்தார்.
நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னதாக எக்ஸ் தளத்தில் வக்ஃப் மசோதா குறித்து பதிவிட்ட ராகுல் காந்தி,
”வக்ஃப் திருத்த மசோதா என்பது முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும், அவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் சொத்துரிமைகளை பறிப்பதையும் நோக்கமாக கொண்ட ஆயுதமாகும்.
ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளால் அரசியலமைப்பு மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் மற்ற சமூகத்தினரும் குறிவைப்பதற்கான முன்னுதாரணத்தை அமைக்கிறது.
அரசியலமைப்பு பிரிவு 25, மத சுதந்திர உரிமையை மீறுவதால், காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது” எனப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியை விமர்சித்து சமீர் என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”காலையில் இருந்து நடைபெற்ற ஒட்டுமொத்த விவாதத்திலும் பங்கேற்காத ராகுல் காந்தி, வாக்கு செலுத்த மட்டும் வருகைதந்துள்ளார். இவர் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை விடுங்கள், ஒரு உறுப்பினராக இருக்கக் கூட தகுதியற்றவர்” எனத் தெரிவித்துள்ளார்.
He was absent for the entire debate since morning and now he as come to the Parliament only to vote - forget LoP, he is not even fit to be a MP pic.twitter.com/YeZ566Cx89
— Sameer (@BesuraTaansane) April 2, 2025
இதனிடையே, மக்களவைக்கு கார்கோ பேண்ட் மற்றும் டி - சர்ட் உடை அணிந்து செருப்பு போட்டுக் கொண்டு ராகுல் காந்தி வந்ததையும் இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.