அமெரிக்காவின் பரஸ்பர வரி: நாட்டின் பொருளாதாரம் என்னவாகும்?
உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்படும் பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டார்.
அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பொருள்களுக்கு, அமெரிக்காவும் அதே அளவுக்கு வரி விதிக்கும், இது ஏப்ரல் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
நேற்று டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், இந்திய பொருள்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சீனாவுக்கு 34 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 20 சதவீதமும், வியட்நாம் பொருள்களுக்கு 46 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் இலங்கைக்கு 44 சதவீதமும் பாகிஸ்தானுக்கு 29 சதவீதமும் அமெரிக்கா சார்பில் பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை வெளியிடும்போது, இந்தியா குறித்துப் பேசிய டிரம்ப், இந்தியா, மிக மிக கடினமாக இருக்கிறது, அந்நாட்டின் பிரதமர் இப்போதுதான் வந்து சென்றார். அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பர்தான். நானும் அதைத்தான் சொல்கிறேன், நீங்கள் எனக்கு சிறந்த நண்பர்தான், ஆனால், அமெரிக்காவை நீங்கள் நல்ல விதத்தில் நடத்தவில்லை. எங்கள் நாட்டுப் பொருளுக்கு அவர்கள் 52 சதவீதம் வரி விதிக்கிறார்கள். நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அதற்கு நிகராக வசூலிப்பது ஒன்றுமே இல்லை. இது பல ஆண்டுகாலமாக இப்படியே இருக்கிறது.
ஆனால், நான் அமெரிக்க அதிபராக இருந்த போது சீனாவுடன் வணிகம் தொடங்கியது. அவர்களிடமிருந்து பல லட்சம் கோடி வரியாகக் கிடைக்கிறது என்று பேசினார்.
அதாவது, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரி அதாவது இந்தியாவுக்கான வரி 26 சதவீதம். ஆனால், இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு சராசரியாக 52 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
தற்போது இந்தியப் பொருள்களை, அந்நாட்டில் இறக்குமதி செய்யும்போது வரி 26 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பெல்லாம் ஒவ்வொரு துறைக்கும் அமெரிக்கா ஒவ்வொரு விதமான பரஸ்பர விதியை வகுத்திருந்தது. அதாவது வேளாண் துறைக்கு 5.8 சதவீதம் வரி என்பது போன்று இருந்தது. ஆனால் அது தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பினால் அனைத்து நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கு ஒப்பீட்டளவில் பாதிப்பு குறைவுதான். அதாவது நமது அண்டை நாடுகளாக சீனாவுக்கு 34 சதவீதம், வியட்நாமுக்கு 46, தைவானுக்கு 32 என நம்மைவிட அதிக வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால், ஒருபக்கம் சிலத் துறைகள் பாதிக்கப்பட்டாலும் ஜவுளித்துறை எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, நமது திருப்பூர் உள்ளிட்ட ஜவுளியை அடிப்படையாக வைத்து இருக்கும் நகரங்களுக்கு வரப்பிரசாதமாக மாறலாம். இதுபோலவே, ஒரு சில துறைகளுக்குப் பின்னடைவாகவும், பல துறைகளுக்கு நல்வாய்ப்பாகவும் இது மாறலாம் என்றே பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
அதுபோல, அமெரிக்கா தற்போது விதித்திருக்கும் இந்த வரியை செலுத்தப்போவது அமெரிக்கர்கள்தான். ஆனால், இதனால் ஏற்படும் பாதிப்பு இந்தியர்களைத் தாக்கும்.
வரி விதிப்பினால் விலை அதிகரிக்கும். விலை அதிகரிக்கும்போது. பயன்படுத்தும் அளவு குறையலாம். ஆனால், அத்தியாவசிய, பயன்படுத்த வேண்டிய பொருள்களின் அளவு குறையாது. ஒருவேளை பயன்பாடு குறைந்தால், நமது நாட்டில் ஏற்றுமதி குறையும். அடுத்து உற்பத்தி குறையும். இதனால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படலாம். ஆனால், ஒரு சில மாதங்களில் மீணடும் நாம் பொருளாதார அளவில் எழுந்துவிடுவோம் என்றே நிபுணர்கள் கணித்துள்ளனர்.