பயிற்சியில் பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு லித்துவேனியா அரசு மரியாதை!
லித்துவேனியா நாட்டில் ராணுவப் பயிற்சியின்போது பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு அந்நாட்டு அரசும் மக்களும் மரியாதை செலுத்துகின்றனர்.
ஐரோப்பிய நாடான லித்துவேனியாவில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் முதலாவது கவசப் படைப் பிரிவு போர் அணியைச் சேர்ந்த 4 வீரர்களின் ராணுவ வாகனம் கடந்த வாரம் மாயமானது.
இதனைத் தொடர்ந்து, லித்துவேனியா, போலந்து மற்றும் அமெரிக்க ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து பெலாரஸ் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள பயிற்சித் திடலில் வனப்பகுதி மற்றும் சதுப்பு நிலங்களில் தீவிரத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 31 அன்று சதுப்பு நிலத்தில் புதைந்த நிலையில் அவர்களது ராணுவ வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு 4 வீரர்களும் பலியானதாக உறுதி செய்யப்பட்டது. பின்னர், கடந்த ஏப்.1 அன்று 4வது வீரரின் உடலும் மீட்கப்பட்டது.

இந்நிலையில், பலியான அமெரிக்க ராணுவ வீரர்களான ட்ராய் எஸ்.க்னட்சன் (வயது 28), ஜோஸ் டுவனெஸ் ஜூனியர் (25), எட்வின் ஃப்ரான்கோ (25) மற்றும் டண்டே டி. டட்டியானோ (21) ஆகியோரின் உடல்கள் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் அமெரிக்கா கொண்டு செல்லப்படுவதற்கு முன் லித்துவேனியா தலைநகர் விலினியஸில் இன்று (ஏப்.3) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்தில் லித்துவேனிய அதிபர் கிடானஸ் நவுசேதா, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், மதகுருக்கள், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் ஆகியோர் பலியான ராணுவ வீரர்களுக்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரில் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் அவர்களது கூட்டாளர்களை ஆதரிக்கும் ராணுவ நடவடிக்கையான அட்லாண்டிக் ரிசால்வின் ஒரு பகுதியாக ஜனவரி மாதம் அமெரிக்காவின் முதலாவது கவசப் படைப் பிரிவு போர் அணியைச் சேர்ந்த 3,500 வீரர்கள் போலந்து உள்ளிட்ட பால்டிக் நாடுகளுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:புதிய ஊழலில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர்?