மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்
1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார்.
மணிப்பூரின் பாஜக எம்எல்ஏக்கள் 2001ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மாநிலத்தில் எல்லை நிர்ணயம் மேற்கொள்வதற்கு முன்பு தேசியக் குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி)யில் செயல்படுத்த வேண்டும் என்று கோரிய ஒரு நாளுக்குப் பிறகு, பிரேன் சிங் தன் கருத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
மியான்மரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்தான் மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு காரணம். இதனால் மணிப்பூரில் வன்முறை கலவரமாக மாறியது. இதில் 250-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பலர் தங்களது வீடுகளை இழந்தனர்.
நாம் ஒரு முழுமையான மாநிலமாக மாறுவதற்கு முன்பே, ஆயிரக்கணக்கான அகதிகள் அப்போது அதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க மணிப்பூரில் குடியேறினர். 1960-க்கு மேல் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வுக்கான உதவி வழங்கப்பட்டதாக ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
அந்தக் குடும்பங்களுக்கு என்ன ஆனது? அவர்கள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டனர்? அதன் பிறகு எத்தனை தலைமுறைகள் வளர்ந்துள்ளன? அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனவா? இந்தக் கேள்விகள் பொதுக் களத்தில் முழுமையாகப் பேசப்படவில்லை, மேலும் பல ஆண்டுகளாக மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பு மாறியிருந்தாலும், இந்தப் பிரச்னை பெரும்பாலும் பேசப்படாமல் உள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இதை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜக அரசின் மீது பழி சுமத்தாமல், என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்டு, அதன் தாக்கங்களைப் பற்றிச் சிந்தித்து, நியாயமான, சமநிலையான பாதையை முன்னோக்கி வகுக்கவேண்டும். ஏனெனில் இந்தப் பிரச்னை தொலைநோக்கு விளைவுகளைக் கொண்டுள்ளது, மாநிலத்தின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று அவர் கூறினார்.