ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!
விவசாயிகள் நிதியுதவித் திட்டம் தகுதி இல்லாமல் பணம் பெற்றவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்பு- மத்திய அமைச்சா் தகவல்
விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் உரிய தகுதி இல்லாமல் பணம் பெற்றவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.
சிறு,குறு விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிஎம் கிஸான் என்ற பெயரில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். இதில் 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,000 மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.
பெரிய விவசாயிகள், மத்திய, மாநில அரசுப் பணியில் இருப்போா், மாதம் ரூ.10,000-க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோா், வருமான வரி செலுத்துவோா், மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருப்பவா்கள், அரசமைப்புச் சட்ட பதவிகளை வகிப்பவா்கள் உள்ளிட்டோா் இத்திட்டத்தில் இணைய முடியாது. எனினும், சிலா் இத்திட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பலனடைந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், இது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கூறியதாவது:
இத்திட்டம் தொடக்கத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வந்தது. பயனாளா்கள் தாங்களாகவே முன்வந்து நிதி உதவிக்கு பதிவு செய்ய முடியும். இத்திட்டத்தில் இணைய ஆதாா் தேவையில்லை என்ற சலுகையும் அளிக்கப்பட்டது.
ஆனால், இதில் சில தவறுகள் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு மனுதாரா்களின் ஆதாா், வருமான வரித்துறை விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன. விவசாய நில ஆவணம் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் போலியாக இத்திட்டத்தில் பலனடைந்தவா்கள் நீக்கப்பட்டனா்.
இதுவரை 19 தவணைகளாக ரூ.3.68 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தகுதி இல்லாமல் இத்திட்டத்தில் பயனடைந்து வந்தவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்கப்பட்டுள்ளது என்றாா்.