தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!
தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்கு குறைந்துள்ளது.
இதையும் படிக்க : மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
’அலுவலகங்களில் பாலின சமத்துவம்’ என்ற தலைப்பில் டீம் லீஸ் டிஜிட்டல் நிறுவனம் செய்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், நடுத்தர அளவிலான பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2020 - 2024 இடையிலான காலகட்டத்தில் 4.13 சதவிகிததில் இருந்து 8.93 சதவிகிதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச திறன் மையங்களின் பெண்களின் பங்களிப்பு 2022 ஆம் ஆண்டு 42.40 சதவிகிதமாக இருந்த நிலையில், 2024 இல் 38.30 சதவிகிதமாக குறைந்துள்ளது. 2023 இல் 33.60 சதவிகிதமாக இருந்தது. இந்த ஏற்ற இறக்கத்துக்கு சுழற்சி முறை வேலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வங்கிகள், எரிசக்தி, உற்பத்தி போன்ற தொழில்நுட்பம் இல்லாத பிற துறைகளில் ஆண்களின் ஆதிக்கம் தொடர்வதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பு 14 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டை (1.90%) ஒப்பிடுகையில் நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட ஒரே பதவியில் இருந்தாலும், பாலின ரீதியில் ஊதிய இடைவெளி தொடர்ந்து கொண்டு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிலை பதவிகளில் 6 சதவிகிதமாகவும் நடுத்தர பதவிகளில் 19 சதவிகிதமாகவும் உயர் பதவிகளில் 13 சதவிகிதமாகவும் ஊதிய இடைவெளி இருக்கிறது.