அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஊழல் நடவடிக்கைகள் நடந்ததாகக் கூறி, ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிஷியின் தேர்தலை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்காஜி பகுதியில் வசிக்கும் கமல்ஜித் சிங் துக்கல், ஆயுஷ் ராணா ஆகியோர் அதிஷியின் தேர்தலை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவில், அவரும் அவரது தேர்தல் முகவர்களும் தேர்தலின்போது ஊழல் நடைமுறைகளைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோர் மனுவில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டதற்கு ஆட்சேபனை எழுப்பினார்.
நீதிபதி ஜோதி சிங், இந்தியத் தேர்தல் ஆணையம், தில்லி காவல்துறை, அதிஷி தேர்தலில் வெற்றி பெற்ற கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கை ஜூலை 30ஆம் தேதிக்கு நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டது.
கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.