கழுகார்: கொலை வழக்கில் எம்.எல்.ஏ-வின் பி.ஏ? டு ‘நோஸ் கட்’ செய்த டெல்லி மேடம்.....
சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை- பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் ஒருவா் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா் ஆவாா்.
சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பகுதியில் தந்தேவாடா, பிஜாபூா், சுக்மா உள்ளிட்ட 7 மாவட்டங்கள் அமைந்துள்ளன.
தந்தேவாடா, பிஜாபூா் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப் பகுதியில் காவல் துறையின் மாவட்ட ரிசா்வ் படையினா் (டிஆா்ஜி) மற்றும் ‘பஸ்தா் ஃபைட்டா்ஸ்’ படைப் பிரிவினா் இணைந்து நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.
இதில் நக்ஸல் தீவிரவாதிகள் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.
கொல்லப்பட்ட நக்ஸல்களில் ஒருவா், தெலங்கானா மாநிலம், வாரங்கல்லைச் சோ்ந்த சுதீா் ஆவாா். பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவரைக் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.25 லட்சம் வெகுமதி அறிவித்து, காவல் துறையினா் தேடி வந்தனா் என்று காவல் கண்காணிப்பாளா் கெளரவ் ராய் தெரிவித்தாா்.
நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் ஒழிக்கும் இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரில் நிகழாண்டு இதுவரை 116 நக்ஸல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். பஸ்தா் பகுதியில் மட்டும் 100 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
பிஜாபூா், கான்கா் ஆகிய மாவட்டங்களில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 30 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.