சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!
கழுகார்: கொலை வழக்கில் எம்.எல்.ஏ-வின் பி.ஏ? டு ‘நோஸ் கட்’ செய்த டெல்லி மேடம்..!
தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில், அரசியல் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்தக் கொலை வழக்கில், அந்த மாவட்டத்தின் முக்கியத் தொகுதியின் எம்.எல்.ஏ-வின் உதவியாளரும் அவரது ரத்த உறவும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களாம். இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதாரத்தோடு புகார் கொடுத்தும், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். குறிப்பாக, எம்.எல்.ஏ-வின் உதவியாளர் பெயரை வழக்கில் சேர்க்காமல் இருக்க, போலீஸார் தரப்பில் ‘இனிப்பு’ பேச்சுவார்த்தையும் கனஜோராக நடக்கிறதாம். ‘இந்த விவகாரத்தை லோக்கல் எதிர்க்கட்சியினர் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதால், தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஆளும் தரப்புக்குத்தான் பெரும் பின்னடைவு உருவாகும்’ என்கிறார்கள் லோக்கல் உடன்பிறப்புகள்!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டத்திற்கு விசிட் அடிக்கவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால் அவர் கலந்துகொள்ளும் அரசு விழா, கட்சி நிகழ்ச்சி என இரண்டையுமே மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியிருக்கிறது. சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் நேரம் என்பதால், டைட் ஷெட்யூல் போடப்பட்டிருக்கிறதாம். இருப்பினும் அவரைச் சந்திக்க, முன்னாள் இன்னாள் மாவட்டப் புள்ளிகளின் தரப்பு கடுமையாக முட்டிமோதி வருகிறார்களாம். ‘இவர்களின் பஞ்சாயத்தைக் கேட்டு முதல்வருக்குத்தான் தலைச்சுற்றல் உண்டாகப்போகிறது’ என்கிறார்கள் உடன்பிறப்புகள். இந்த விவகாரம் உளவுத்துறை மூலமாக மேலிடத்தையும் எட்டியிருப்பதால், புரோகிராமில் மாற்றமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம்!
தனது துறை சார்ந்த மீட்டிங் ஒன்றில் பங்கேற்க, சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் டெல்லி ‘கணக்கு’ மேடம். வழக்கமாக, டெல்லியிலிருந்து பெரிய தலைகள் யார் சென்னை வந்தாலும், அவர்களை ஓடோடிச் சென்று வரவேற்பார் இங்கிருக்கும் மலர்க் கட்சியின் மாநிலப் புள்ளி. ஆனால் ‘கணக்கு’ மேடத்தை வரவேற்பதை மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறாராம். சமீபத்தில் ஒரு மாற்றமாக, டெல்லி மேடத்தைச் சந்திக்க நேரம் கேட்டிருந்திருக்கிறார் மாநிலப் புள்ளி. ‘அலுவல்ரீதியான பிரச்னை என்றால் வாருங்கள். மற்றபடி தனியே சந்தித்துப் பேச எனக்கு நேரமில்லை...’ என நோஸ் கட் செய்துவிட்டாராம் மேடம். இதில் கடுப்பான மாநிலப் புள்ளி, ‘கட்சி சார்பாக யாரும் டெல்லி மேடத்தை வரவேற்கவும் வழியனுப்பவும் செல்லக் கூடாது’ என ரகசிய உத்தரவு போட்டுவிட்டாராம். ‘இருவருக்கும் இடையே அப்படி என்னதான் பகை?’ என மலர்க்கட்சி ஆபீஸில், பெரிய பட்டிமன்றமே நடக்கிறதாம்!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில்தான், மலர்க் கட்சியிலிருந்து விலகி ‘மைக்’ கட்சியில் இணைந்தார் வனப்புள்ளியின் பெண் வாரிசு. கட்சியில் இணைந்த ஓராண்டிலேயே அவருக்கு இளைஞரணியில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது, ‘அண்ணன்’ தலைவரின் குடும்பத் தலைவி அனுக்கிரகத்தால்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தனக்கு வேண்டியவர்களுக்குப் பொறுப்பு வழங்குவது, வேண்டாதவர்களைக் கட்டம் கட்டுவது என, கட்சிச் செயல்பாடுகளில் படு ஆர்வம் காட்டுகிறாராம் குடும்பத் தலைவி. ‘கட்சியின் மாநில நிர்வாகிகளைக் கண்காணிக்கும் அவர், பசை விவகார நிர்வாகப் பொறுப்பையும் இப்போது தன்வசம் வைத்திருக்கிறாராம். `வீட்டுப் பக்கம் இவர்களெல்லாம் வரலாம்... இவர்களெல்லாம் வரக்கூடாது’ என்று குடும்பத் தலைவி போடும் உத்தரவை, அண்ணன் தலைவரால்கூட மறுக்க முடியவில்லையாம். அந்தளவுக்குக் குடும்பத் தலைவியின் பவர் கட்சிக்குள் உயர்ந்துவிட்டது’ என்கிறார்கள் ‘மைக்’ கட்சி வட்டாரத்தில்!
தமிழ்நாடு கதர்க் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு, குறட்டைவிட்டு தூங்குகிறது எனக் கொதிக்கிறார்கள் கதர் புள்ளிகள். ‘தமிழகம் முழுவதும் கிராம கமிட்டிகளை அமைக்க வேண்டும்’ என்கிற ஒரே ஒரு பணிதான் அந்தக் குழுவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அந்த வேலையைக்கூட செய்யவில்லையாம். அதற்கு, குழுத் தலைவர் மீதான அவநம்பிக்கைதான் காரணம் என்கிறார்கள் கதர்ப் புள்ளிகள். ‘ஆரம்பம் முதலே சூரியக் கட்சியின் அனுதாபியாக இருக்கும் குழுத் தலைவரை, கதர்க் கட்சித் தொண்டர்கள் நம்பவில்லை. கட்சி மீட்டிங்கிலும் சூரியக்கட்சியின் புகழைத்தான் குழுத் தலைவர் பாடுகிறார். கமிட்டி அமைப்பதில்கூட அவர் ஆர்வம் காட்டவில்லை. அதற்காகச் சுற்றுபயணமும் செய்வதில்லை. இரண்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதைத் தவிர, வேறு எதையுமே ஆக்கப்பூர்வமாக செய்யவில்லை’ என்று கொதிக்கிறார்கள் கதர் புள்ளிகள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb