ஹைதி: முக்கிய நகரத்தைத் தாக்கி 500 சிறைக் கைதிகளை விடுவித்த குழுக்கள்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி தில்லி கேபிடல்ஸ் அபாரம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாதை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தில்லி கேபிடல்ஸ் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அனிகேத் அதிரடி, 164 ரன்கள் இலக்கு
டாஸ் வென்று முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. அபிஷேக் சர்மா 1 ரன், இஷான் கிஷன் 2 ரன், நிதீஷ் ரெட்டி 0 ரன், டிராவிஸ் ஹெட் 22 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தனர். 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் திணறியது.
இதனையடுத்து, அனிகேத் வர்மா மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தனர். அனிகேத் வர்மா களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடி அசத்தினார். கிளாசன் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய அனிகேத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தில்லி கேபிடல்ஸ் அபார வெற்றி
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 16 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தியது.
தில்லி கேபிடல்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் சிறப்பாக விளையாடினர். இருப்பினும், மெக்கர்க் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், களமிறங்கிய அபிஷேக் போரெல் அதிரடியாக விளையாடினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
கே.எல்.ராகுல் 5 பந்துகளில் அதிரடியாக 15 ரன்கள் (2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் போரெல் 18 பந்துகளில் 34 ரன்களுடனும் (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 14 பந்துகளில் 21 ரன்களுடனும் (3 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தில்லி கேபிடல்ஸ் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.