சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை
திருப்பத்தூர்: `ஆபத்தான சாலை' - சுட்டிக்காட்டிய விகடன்; பாதுகாப்பை உறுதிப்படுத்திய அதிகாரிகள்!
திருப்பத்துாரில் இருந்து பெரிய ஏரி வழியாக திருமால் நகர், மிட்டூர், ஆண்டியப்பனுார், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
இந்நிலையில், பெரிய ஏரியிலிருந்து திருமால் நகர் டாஸ்மாக் கடை வரை செல்லும் சாலையின் இரு புறங்களிலும் எந்தவித தடுப்பு கம்பிகளோ, சுவர்களோ கட்டப்படாமல் ஆபத்தாகக் காட்சி அளிக்கிறது.குறிப்பாக சாலை வளையும் இடத்தில் மிகவும் கோணலாக உள்ளதால், சில நேரங்களில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஏரியின் அந்த பக்கம் விழுந்து, விபத்துக்குள்ளாகின்றன.

அதனால் திருப்பத்துாரில் இருந்து செல்லும்போது சாலையின் இடது புறத்தில் ஏரி நீரிலும், வலது புறத்தில் 30 அடி ஆழம் உள்ள பள்ளத்திலும் எங்குத் தவறி விழுந்து விடுவோமோ என்று பயந்து பயந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் தினமும் பயணம் மேற்கொள்ளும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்தச் சாலை வழியாக வாகனங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் திக், திக் மன நிலையிலேயே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் இல்லாததால் திருப்பத்தூரிலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெங்களாபுரம், மாடப்பள்ளி வழியாக 6 கி.மீ. வழியாகச் சுற்றிச்செல்கிறது. ஏரி இருப்பதால் அந்த வழியாகப் பேருந்துகள் இயக்கப்படா விட்டாலும் அந்த வழியாகச் செல்லும் டூவீலர், கார், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் நலன் கருதித் தடுப்பு கம்பிகள் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் பொதுமக்களிடம் பேசியும் ஸ்பாட் விசிட் அடித்தும் மார்ச் 25-ம் தேதி "திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்! என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு போயிருந்தோம்.





அதன் எதிரொலியாகச் செய்தி வெளியான மூன்றே நாள்களில் (28/03/25) அன்று அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி விரைந்து தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இனிமேல் விபத்துகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று பொதுமக்கள் இன்முகத்துடன் விகடனுக்கு நன்றி தெரிவித்தனர்.