Parliament ; Assembly : அனல் பறந்த விவாதங்கள்! | விரக்தியில் Annamalai BJP | Imp...
ஏப்ரல் 6-ல் புதிய பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி வருகை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!
நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் மீது ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டது. 1914ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து சேவை துவக்கப்பட்ட இந்தப் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக பாலத்தின் இடையே திறந்து மூடும் வகையிலான ஹெர்ஷர் பாலமும் அமைக்கப்பட்டது. 111 ஆண்டுகளைக் கடந்த இந்த பாலம் கடலில் வீசும் உப்பு காற்றால் சில ஆண்டுகளுக்கு முன் பாதிப்படைந்தது. இதனால் இந்த ஹெர்ஷர் பாலத்தை திறந்து மூடுவதில் சிக்கல் நிலவியது. மேலும் 100 ஆண்டுகளை கடந்ததால் இந்தப் பாலத்தின் வலு குறைந்ததும் ஆய்வின் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து ஆங்கிலேயர் அமைத்த பாம்பன் பாலத்திற்கு மாற்றாக புதிய ரயில் பாலம் ரூ 550 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி இந்த புதிய பாலத்தில் ரயில் சேவையினை துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவிற்கு முந்தைய தினங்களில் இலங்கை செல்லும் பிரதமர் மோடி, இவ்விழாவில் பங்கேற்பதற்காக அங்கிருந்து 6-ம் தேதி காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபம் முகாமிற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கென இலங்கை அனுராதபுரத்திற்கு இந்திய விமானப்படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் இன்று சென்றுள்ளன.



இலங்கை அனுராதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. இதற்கென ஏற்கனவே 3 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அங்கு உள்ள நிலையில், புதிதாக மேலும் ஒரு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அங்கு அமைக்கப்படுகிறது. ஹெலிகாப்டரில் அங்கு வரும் பிரதமர் பின்னர் கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வருகிறார். அங்கு சாலை பாலத்தின் மீது நின்றவாறே புதிய ரயில் பாலத்தின் ரயில் சேவையினை கொடியசைத்து துவக்குகிறார்.
இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாகவும் தெரிகிறது. இதன் பின் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான யாத்திரை நிவாஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் ராமேஸ்வரம் - தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதையடுத்து இவ்விழாவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் அங்கு பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையின் சார்பில் நடைபெற உள்ள இந்த விழாவில் பங்கேற்க உள்ள பிரதமரின் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும், ரயில்வே துறை உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.


இதற்கென சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் நேற்று மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்திறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் வந்த தென்னக ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை கோட்ட மேலாளர் சரத் ஶ்ரீவத்சவா ஆகியோர் விழா நடைபெற உள்ள வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்தில் இருந்தவாறு பிரதமர் கொடி அசைக்க உள்ள இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏதுவாக அன்றைய தினம் சிறப்பு ரயில் ஒன்றை தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.