சொத்து விவரங்கள்: பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்
ஊட்டி: கடையடைப்பால் மூடப்பட்ட உணவகங்கள், மலிவு விலையில் சுடச்சுட பசியாற்றிய அம்மா உணவகங்கள்!
கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை வரைமுறைப் படுத்தும் நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்தது. ஊட்டியைப் பொறுத்தவரை வார நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களையும் வார இறுதி நாள்களில் 8 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது .

நீலகிரி மாவட்ட நுழைவு வாயில் பகுதிகளில் இ- பாஸ் முறையில் சுற்றுலா வாகனங்களை அனுமதித்து வருகின்றனர். இந்த கட்டுப்பாடு வரைமுறைகள் பொதுப் போக்குவரத்து, உள்ளுர் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போன்றவற்றிற்கு பொருந்தாது எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா வணிகத்தை மட்டுமே சார்ந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரம் இந்த உத்தரவால் பாதிக்கப்படும் என்கிற கருத்தை வணிகர் சங்கங்கள் முறையிட்டு வந்தன. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மாவட்டம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

சிறு குறு வணிகர்கள் முதல் பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் வரை இந்த கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேநீர் கடைகள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தததால் சுற்றுலா பயணிகள் பலரும் உணவு கிடைக்காமல் தவித்துள்ளனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகளின் உணவு தேவையை நீலகிரியில் உள்ள அம்மா உணவகங்கள் பூர்த்தி செய்துள்ளன. காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வேளையில் அம்மா உணவகங்களில் கூடிய நூற்றுக்கணக்கானவர்களுக்கு மலிவு விலையில் உணவளித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், "ஊட்டியில் இன்று முழு கடையடைப்பு நடக்கும் என்பதே எங்களுக்கு தெரியாது. குடும்பத்துடன் இங்கு சுற்றுலா வந்த பின்புதான் தெரியவந்தது. சாப்பாட்டிற்கு தேடி அலைய வேண்டியிருந்தது. நல்வாய்ப்பாக அம்மா உணவகங்கள் எங்களுக்கு பெரிய ஆறுதலாக இருந்தன. யாருமே எதிர்பார்க்காத மிகக் குறைந்த விலையில் உணவுகளை சுடச்சுட பரிமாறி பசியாற்றினார்கள்" என்றனர்.

ஊட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்களிடம் பேசினோம், "வழக்கமாக இது போன்ற கடையடைப்பு சமயங்களில் அம்மா உணவகங்களில் கூட்டம் அதிகரிக்கும் . இன்று முழு கடையடைப்பு நடக்கும் என ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் என நேற்றே அதற்கு தயாராகி வழக்கத்தை விட அதிகமாக உணவு தயாரிப்பில் ஈடுபட்டோம். மக்களின் வருகை பல மடங்கு அதிகமாக இருந்தாலும் ஊட்டி நகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்பால் பெரும்பாலானவர்களுக்கு உணவு கொடுக்க முடிந்தது" என்றனர்.